மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

சாத்தான்குளம்: மாஸ்க்கை ஆயுதமாக்கிய கனிமொழி

சாத்தான்குளம்: மாஸ்க்கை ஆயுதமாக்கிய கனிமொழி

சாத்தான்குளம் போலீஸாரால் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகிய தந்தையும் மகனும் சித்திரவதை செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் கோவில்பட்டி சப் ஜெயிலில் பரிதாபமாக மரணம் அடைந்தனர். இதைக் கண்டித்து தமிழகம் முழுதும் வணிகர்கள் கடையடைப்பு செய்தனர்.

தொகுதி எம்பி என்கிற முறையில் திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி உடனடியாக இதுகுறித்து தென் மண்டல போலீஸ் ஐஜியிடம் பேசினார். டிஜிபி அலுவலகத்துக்கு உடனடியாக நேரில் சென்று சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தேசிய மனித உரிமை ஆணையத்துக்கும் இது தொடர்பாக விரிவான புகார் அளித்து சாத்தான்குளம் பிரச்சினையில் ஆங்கில ஊடகங்களும் தேசிய தலைவர்களும் கவனம் திருப்பச் செய்தார். சாத்தான்குளத்துக்கே நேரில் சென்று கொலையானவர்களின் இல்லத்துக்கு சென்று திமுக தலைமை அறிவித்த 25 லட்ச ரூபாய் நிதியுதவியை அளித்து ஆறுதல் கூறினார் கனிமொழி.

கொரோனா ஊரடங்கு உத்தரவால் அனைவரும் மாஸ்க் அணிவது தற்போது கட்டாயம் என்ற நிலை உள்ளது. மேலும் கொலையானவர்களுக்கு நீதி கேட்டு போராட்டங்களும் நடத்த இயலாத சூழல் உள்ளது. இந்நிலையில், சாத்தான்குளம் கொடுமைக்கு நீதி கேட்டு மாஸ்க்கையே ஆயுதமாக மாற்றியுள்ளார் கனிமொழி. ‘ஜஸ்டிஸ் ஃபார் ஜெயராஜ், பென்னிக்ஸ்’ என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட திமுகவின் கறுப்பு சிவப்பு நிற மாஸ்க்கை தானும் அணிந்து இந்த மாஸ்க்குகளை அணியுமாறு இன்று (ஜூன் 29) வெளியிட்டிருக்கிறார் கனிமொழி எம்பி.

கொரோனா விழிப்புணர்வு, சாத்தான்குளம் கொடுமைக்கு நீதி கேட்டல் ஆகிய இரண்டையும் மாஸ்க் மூலம் வலியுறுத்தியுள்ளார் கனிமொழி.

-வேந்தன்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon