மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, வெள்ளி, 10 ஜூலை 2020

அரசுக்கு சொன்ன ஆலோசனைகள்: பட்டியலிட்ட ஸ்டாலின்

அரசுக்கு சொன்ன ஆலோசனைகள்: பட்டியலிட்ட ஸ்டாலின்

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த திமுக தலைவர் ஸ்டாலின் எந்த ஆலோசனையையும் தெரிவிக்கவில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். இதனையடுத்து, தான் அரசுக்கு சொன்ன ஆலோசனைகளை பட்டியலிட்ட ஸ்டாலின், நூற்றுக்கணக்கான ஆலோசனைகளை அரசு கேட்கவில்லை என்று விமர்சித்தார்.

எனினும், ஸ்டாலின் அரசியல் சம்பந்தமாக மட்டுமே அறிக்கைகளை வெளியிட்டு வருகிறாரே தவிர நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து எதுவும் சொல்லவில்லை என்றும், அறைக்குள் இருந்து குறைகூறுகிறார் எனவும் முதல்வர் குற்றம்சாட்டினார்.

இதற்கு இன்று (ஜூன் 29) பதிலளித்துள்ள ஸ்டாலின், “முதல்வருக்கு இதற்கு மேல் என்ன ஆலோசனைகள் சொல்வது என்று எனக்கே தெரியவில்லை. அந்தளவுக்கு ஆலோசனைகளை மார்ச் மாதம் 16-ம் தேதியில் இருந்து சொல்லி வருகிறேன். இதுவரைக்கும் 50-க்கும் மேற்பட்ட அறிக்கைகள் வெளியிட்டுள்ளேன். இவை அனைத்தும் மக்கள் மன்றத்தில் உள்ளது. அதனை மீண்டும் முழுமையாகப் படித்துப் பார்த்துப் புரிந்து கொள்ளும் திறன் இருக்குமானால், புரிந்து செயல்படுத்துங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவரை நான் விடுத்த ஒரு சில ஆலோசனைகளைத் தவிர, பெரும்பாலான மற்றவற்றைக் கேட்காத நிலையில் கொரோனா பரவல் அதிகமாகி வருவதாக குறிப்பிட்ட ஸ்டாலின், "இதில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, 'ஸ்டாலின் என்ன ஆலோசனை சொன்னார்?' என்று பிரச்சினையைத் திசை திருப்பி வருகிறார் பழனிசாமி. நான் சொன்ன ஆலோசனைகள் மக்களுக்குத் தெரியும். முதல்வருக்கு இதுவரை தெரியவில்லை என்றால் இனிமேலாவது தெரிந்து கொள்ளுங்கள்" என்று கூறியுள்ளார்.

ஆலோசனைகள்

மேலும், “பரிசோதனைகளை அதிகப்படுத்துங்கள், தொற்றுப் பகுதியை மற்ற பகுதியில் இருந்து தனியாகப் பிரித்து, அரண் போலத் தடுங்கள், தொற்று அறிகுறி இருப்பவர், இல்லாதவர் என்ற பேதம் பார்க்காமல் அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்துங்கள், வாழ்வாதாரம் பாதிக்கப்படும் மக்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் கொடுங்கள், மக்களைக் காக்கும் மருத்துவர்களையும், செவிலியர்களையும் அரசு காக்க வேண்டும், பரிசோதனைகளை மாவட்ட வாரியாக வெளியிடுங்கள்,

மறைக்கப்பட்ட 236 மரணங்கள் குறித்து விளக்கம் அளியுங்கள், பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளுக்கு ஆரோக்கியமான உணவுகள் கொடுங்கள், சித்த மருத்துவ மருத்துவர்கள் சொல்லும் ஆலோசனைகளையும் கேளுங்கள், கேரளா எப்படி மீள்கிறது; தாராவி எப்படிக் காக்கப்படுகிறது என்பதை தெரிந்தறியுங்கள்” என்று தான் சொன்ன ஆலோசனைகளையும் பட்டியலிட்டுள்ளார். மேலும், மக்கள் காக்கப்படும்வரை ஆலோசனைகளை சொல்லிக்கொண்டிருப்பேன் எனவும் கூறினார்.

எழில்

திங்கள், 29 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon