bஒரே நாடு, ஒரே சந்தை: காங்கிரஸ் கேள்வி!

politics

ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என மத்திய அரசுக்கு காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.

அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மத்திய அரசால் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு சில பொருட்கள் அதிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. அதே போல விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை விற்பனை செய்வதில் உள்ள தடைகளை கலைவதாக கூறி ‘வேளாண் உற்பத்தி பொருட்கள் , வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம் – 2020, விவசாயிகளின் சுரண்டலை தடுக்க விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்த பாதுகாப்பு அவசர சட்டம் – 2020 கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தியா ஒரே நாடு, ஒரே சந்தை திட்டத்தை நோக்கி நகர்வதாகவும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (ஜூன் 8) கே.எஸ்.அழகிரி கூறுகையில், “விவசாயம் சம்பந்தப்பட்ட இந்த அவசர சட்டங்கள் கொண்டு வரப்படுவது குறித்து தமிழ்நாடு உள்ளிட்ட எந்த மாநில அரசுகளிடமும் நரேந்திர மோடி அரசு கலந்து பேசவில்லை. கருத்தை கேட்கவில்லை. இந்திய அரசமைப்பு சட்டத்தில் மாநில அரசின் பட்டியலில் உள்ள விவசாயம் சம்பந்தமான முக்கியமான பிரச்சனைகளில் மத்திய அரசு தன்னிச்சையாக அவசரம் சட்டம் கொண்டுவர வேண்டிய அவசியம் என்ன?

கொரோனா பாதிப்பினால் நாடே சிக்கி தவித்துக்கொண்டிருக்கிற நிலையில் இத்தகைய அவசர சட்டங்களை கொண்டு வந்தது ஏன்? இதைவிட கூட்டாட்சி தத்துவத்தை சீர்குலைக்கிற நடவடிக்கை வேறெதுவும் இருக்க முடியாது. மாநில உரிமைகளை அப்பட்டமாக பறித்து ஒரே நாடு ஒரே சந்தை என்கிற திட்டத்தை செயலுக்கு கொண்டுவருகிற முயற்சியை இதுவரை தமிழ்நாடு அரசு எதிர்க்கவில்லை. இதில் தமிழக அரசு மௌனம் காப்பதில் உள்ள மர்மம் என்ன?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

“ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே நுழைவுத் தேர்வு என்ற ஒற்றையாட்சி நடைமுறையை கையாண்டு வருகிற பாஜக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை சிதைப்பதற்காக ஒரே நாடு ஒரே சந்தை என்கிற முறையை அமல்படுத்த அவசர சட்டம் இயற்றியுள்ளது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் இருக்கிற விவசாயத்தை பறிக்க முயல்வது அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இதில் தலையிட்டு சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு எவ்வித அதிகாரமும் இல்லை. விவசாயத்துறையை மாநில அரசுகளால் மட்டுமே திறம்பட கையாள முடியும்” என்று வலியுறுத்தியுள்ள அழகிரி,

ஒரே நாடு ஒரே சந்தை மூலம் விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்கும் என்ற உத்தர வாதத்தை மத்திய அரசால் வழங்க முடியுமா ? விவசாயிகளின் விளைபொருட்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து பாதுகாக்கப்படுமா? என்றும் கேள்வியை முன்வைத்துள்ளார்.

மேலும், “கடந்த 2018 ஆம் ஆண்டு 585 மின்னணு முறையிலான விவசாய சந்தைகளை மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்தது. இந்த திட்டம் படுதோல்வி அடைந்துவிட்டது. இதை மூடிமறைப்பதற்குதான் ஒரேநாடு ஒரே சந்தை கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே ஒரே நாடு ஒரே சந்தை என்பது கூட்டாட்சி தத்துவத்தை குழிதோண்டி புதைக்கிற நடவடிக்கையாகும். அதே நேரத்தில் விவசாயிகளின் எதிர்காலத்தை பாழடிக்கிற முயற்சி” என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

**எழில்**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *