சென்னையில் சமூகப் பரவல் ஆரம்பித்துவிட்டதா என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டுமென திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31, 667 ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் 1,156 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு 22,149 ஆக மாறியுள்ளது.
இந்த நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் இன்று (ஜூன் 7) வெளியிட்ட அறிக்கையில், “கொரோனாவைக் கையாளுவதில், குழப்பம் எனும் கழிவைக் கொட்டி அதன்மேல் அமர்ந்திருக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் விபரீதமான நிர்வாகத் திறமையின்மை, வெளிச்சம் போட்டு நிற்கிறது. இறப்பு எண்ணிக்கையைக் கூட இதயமற்ற முறையில் இருட்டடிப்பு செய்கிறது.
வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ளும் அரசின் நடவடிக்கை, கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் உயிரைப் பறிக்கும் மிக முக்கிய காரணியாக அமைந்து விட்டதோ என்ற சந்தேகத்தை அதிகரிக்கும் வகையில் மரணங்களின் எண்ணிக்கை அமைந்திருக்கிறது” என்று கூறியுள்ளார்.
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு, ஐந்து தினங்கள் அங்கே இருந்து, இறந்தால் மட்டுமே கொரோனா மரணக் கணக்காகக் காட்டப்படுகிறது என்பது எவ்வளவு அபத்தம் - அபாயகரமான அணுகுமுறை என்று குறிப்பிட்ட ஸ்டாலின்,
“சென்னை மருத்துவமனைகளில் உள்ள வெண்டிலேட்டர்கள் எத்தனை? நோயால் பாதிக்கப்பட்ட எத்தனைப் பேர் வெண்டிலேட்டரில் இருக்கிறார்கள்? கொரோனா நோயால் ஏற்படும் மரணங்கள் எத்தனை? பிற நோய்களால் ஏற்படும் மரணங்கள் எத்தனை? என்பது போன்ற தகவல்கள் ‘கொரோனா மாநில கட்டுப்பாட்டு அறை’ செய்தி அறிக்கையில் இடம்பெறுவதே இல்லை. தலைநகர் சென்னையில் கொரோனா கோரத் தாண்டவமாடும் நேரத்தில் கூட, வெளிப்படைத்தன்மையுடன் தகவல்களை வெளியிட வேண்டும் என்ற மனசாட்சி இந்த அரசுக்கு எள்ளளவும் இல்லை” என்று குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை மாநகர கொரோனா நோய்த் தொற்றைக் கையாளுவதில் எத்தனை குழப்பங்கள்? கோயம்பேடு மார்கெட் வேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்ய அதிமுக அரசுக்கு ஒரு மாதம், சமூகப் பரவல் ஏற்பட்டிருக்கிறதா இல்லையா’ என்பதை அறிவிக்க இன்றுவரை தயக்கம், தடுமாற்றம், மண்டலம் மண்டலமாக, கொத்துக் கொத்தாகப் பாதிக்கப்பட்ட பிறகும், ஏன் இந்தத் தயக்கம் என்றெல்லாம் கேள்விகளை எழுப்பிய அவர்,
“இவ்வளவு குழப்பங்கள் உள்ள நிலையில், சென்னை மாநகராட்சி மட்டுமல்ல - உள்ளாட்சித்துறை நிர்வாக சீர்கேட்டிற்கே முழுமுதல் காரணமான திரு. எஸ்.பி.வேலுமணியை ஏன் இன்னும் பொறுப்பில் நீடிக்க விட்டிருக்கிறார் முதலமைச்சர்? தனக்கு ஆற்றிவரும் திரை மறைவு சகாயத்தை வெளியில் சொல்லி விடுவார் என்பதற்காகவா?” என்றும் சந்தேகம் எழுப்பியுள்ளார்.
மேலும், “இன்றைக்குச் சென்னை மாநகர மக்கள் நோய்த் தொற்று அச்சத்தில் ஆடிப் போயிருக்கிறார்கள். அது போதாது என்று மரணம் அடைந்தோரின் எண்ணிக்கையை, சரி பாதியாகக் குறைத்து வெளியிட்டு - மிகப்பெரிய துரோகத்தை - மன்னிக்க முடியாத குற்றத்தை அ.தி.மு.க. அரசு செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
சென்னை மாநகர மக்களின் உயிரோடு, ஆபத்தான விளையாட்டு நடத்துவதைக் கைவிட்டு – மாநகரில் ‘சமூகப் பரவல்’ வந்து விட்டதா இல்லையா என்பது பற்றி ஆய்வு செய்து, அறிவியல்ரீதியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து - பரவி வரும் கொரோனா நோய்த் தொற்றுப் பதற்றத்திலிருந்து மக்களைப் பத்திரமாக மீட்டுப் பாதுகாத்திட வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.
எழில்