மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, திங்கள், 10 ஆக 2020

டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை: கேஜ்ரிவால்

டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை: கேஜ்ரிவால்

டெல்லி மருத்துவமனைகளில் டெல்லி மக்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படும் என அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பில் உலகிலேயே ஐந்தாவது அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இந்தியா உள்ளது. நாடு முழுவதும் சுமார் 2.46 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, தமிழகத்தை அடுத்து டெல்லி மூன்றாவது இடத்தில் உள்ளது. இதனிடையே மருத்துவ வசதி தொடர்பாக டெல்லி அரசு அமைத்த 5 மருத்துவ வல்லுநர்கள் கொண்ட அறிக்கையின்படி ஜூன் மாத இறுதிக்குள் அரசு மருத்துவமனைகளில் 15,000 படுக்கைகள் தேவை என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்று (ஜூன் 7) செய்தியாளர்களை சந்தித்த அரவிந்த் கேஜ்ரிவால், “டெல்லியில் உள்ள அரசு மருத்துவமனைகள் டெல்லி மக்களுக்காக மட்டும் ஒதுக்கப்படுகிறது. ஆனால், மத்திய அரசு மருத்துவமனைகளை அனைத்து மாநில மக்களும் பயன்படுத்திக்கொள்ளலாம். நரம்பியல் அறுவை சிகிச்சை உள்ளிட்ட சிறப்பு அறுவை சிகிச்சைகள் செய்வதைத் தவிர தேர்ந்தெடுக்கப்பட்ட சில தனியார் மருத்துவமனைகளும் டெல்லி வாசிகளுக்கு ஒதுக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.

இந்த வாரத் தொடக்கத்தில், கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத்தியில் டெல்லியில் உள்ள மருத்துவமனைகளை டெல்லிவாசிகளுக்கு மட்டுமே ஒதுக்கலாமா என்பது குறித்து பொதுமக்கள் ஆலோசனை வழங்க வேண்டும் என்று முதல்வர் அழைப்பு விடுத்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மேலும், “இதன் மூலம் டெல்லி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளில் மட்டும் 10 ஆயிரம் படுக்கைகளை உறுதி செய்ய முடியும். டெல்லியின் எல்லைகள் கடந்த ஒரு வாரமாக சீல் வைக்கப்பட்டிருந்தன. அவை அனைத்தும் நாளை முதல் திறக்கப்படுகின்றன” என்ற அறிவிப்பினையும் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டுள்ளார். டெல்லி மாநில எல்லை திறக்கப்பட்டால் 3 நாட்களுக்குள் டெல்லியிலுள்ள அனைத்து மருத்துவமனை படுக்கைகளும் நிரம்பிவிடும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கேஜ்ரிவால் விளக்கம் அளித்துள்ளார். எனினும் இதற்கு கடும் எதிர்ப்பு எழத் துவங்கியுள்ளது.

எழில்

ஞாயிறு, 7 ஜுன் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon