eஇந்தியாவின் அந்தஸ்து: பிரதமர் கடிதம்!

politics

நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியிருக்கிறார்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு 2019ஆம் ஆண்டு மே 30ஆம் தேதி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டது. இந்த ஒராண்டு ஆட்சி காலத்தில் எதிர்க்கட்சிகள் மத்திய அரசின் நடவடிக்கைகள் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றன. மத்திய அரசு பதவியேற்று இன்று (மே 30) ஓராண்டு முடிந்து இரண்டாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், நாட்டு மக்களுக்கு அனைத்து மொழிகளிலும் பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் கடிதத்தில், “ கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய வரலாற்றில் பொன்னான ஓர் அத்தியாயம் தொடங்கியது. பல ஆண்டுகளுக்கு பிறகு, இந்த நாட்டு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த அரசுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருந்தனர். இந்தியாவின் 130 கோடி மக்களுக்கும், நமது தேசத்தின் ஜனநாயக மாண்புகளுக்கும் மீண்டும் ஒரு முறை நான் தலை வணங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

**வளர்ச்சித் திட்டங்கள்**

தொடர்ந்து, “2014 முதல் 2019 வரையிலான காலத்தில் இந்தியாவின் அந்தஸ்து கணிசமாக அதிகரித்துள்ளது. ஏழைகளின் கண்ணியம் மேம்பட்டிருக்கிறது. நிதி பங்கெடுப்பு, இலவச எரிவாயு மற்றும் மின் இணைப்புகள், முழுமையான கழிப்பறை வசதி, `அனைவருக்கும் வீடு’ திட்டத்தை நோக்கிய பயணம் என சாதனைகள் நிகழ்த்தப்பட்டன.

சர்ஜிக்கல் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் மூலம் தன் வல்லமையை இந்தியா நிரூபித்துள்ளது. அதே சமயத்தில், ராணுவத்தில் ஒரே அந்தஸ்திலான பதவியில் இருந்து ஓய்வு பெற்ற அனைவருக்கும் ஒரே மாதிரியான ஓய்வூதியம் (OROP), நாடு முழுக்க ஒரே மாதிரியான வரித் திட்டம் – ஜி.எஸ்.டி., விவசாயிகளுக்கு அதிக அளவிலான குறைந்தபட்சக் கொள்முதல் விலை போன்ற பல தசாப்தங்களாக நிலுவையில் இருந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன” என்று பட்டியலிட்ட பிரதமர், “சப்காசாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்ற மந்திரத்தின் மூலமாக அனைத்துத் துறைகளிலும் இந்தியா முன்னேறிக் கொண்டிருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

“கடந்த ஓராண்டாக பல முடிவுகள் பற்றி பரவலாக விவாதிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் இடம் பிடித்துள்ளன.அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டு உணர்வை பலப்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் ஒரு மனதாக அளித்த ராமர் கோவில் தீர்ப்பு, பல நூற்றாண்டுகளாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பதாக அமைந்துள்ளது. பழமை எண்ணம் கொண்ட முத்தலாக் நடைமுறை வரலாற்றின் குப்பைத் தொட்டியில் போடப்பட்டு விட்டது. குடிமக்கள் சட்டத்தில் செய்துள்ள திருத்தம், இந்தியாவின் பரிவு மற்றும் பங்கேற்பு நிலை அளிக்கும் தன்மையை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது” என்றெல்லாம் தனது கடிதத்தில் குறிப்பிடுகிறார் பிரதமர்.

அரசு கொண்டுவந்த திட்டங்கள் மற்றும் சட்டங்கள் குறித்து தனது கடிதத்தில் கூறியுள்ள பிரதமர், “இந்த அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் காரணமாக, கிராமப்புறப் பகுதிகளுக்கும் – நகர்ப்புறப்பகுதிகளுக்கும் இடையிலான இடைவெளி குறைந்து கொண்டே வருகிறது. முதன்முறையாக நகர்ப்புறங்களைவிட கிராமப்புறங்களில் இன்டர்நெட் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளது” என்று கூறினார்.

**கொரோனா வைரஸ்**

நமது நாட்டு மக்களின் நம்பிக்கைகளையும், உயர் லட்சியங்களையும் நிறைவேற்றுவதை நோக்கி நாம் வேகமாக முன்னேறி வரும் வேளையில், உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் நம் நாட்டையும் பீடித்துள்ளது.வல்லமை மிகுந்த, பொருளாதார பலம் மிக்க, சுகாதாரத் துறையில் அதிநவீன வசதிகளைக் கொண்ட நாடுகள் ஒருபுறமும், அதிக மக்கள் தொகையும், குறைவான வசதிகளையும் கொண்ட நாடுகள் மறுபுறமும் இதைச் சமாளித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா பரவும் போது, உலகிற்கு ஒரு பிரச்சினையாக இந்தியா மாறும் என்று பலரும் அச்சப்பட்டார்கள். ஆனால் இப்போது, நம்பிக்கை மற்றும் தாங்கிக் கொள்ளும் தன்மை ஆகியவற்றின் காரணமாக, உலகம் நம்மைக் காணும் பார்வையை நீங்கள் மாற்றிவிட்டீர்கள். உலகின் வல்லமையான, வளமை மிகுந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவின் கூட்டு பலத்திற்கும், செயல் திறனுக்கும் இணை ஏதும் இல்லை என்பதை நீங்கள் நிரூபித்திருக்கிறீர்கள்.

இதுபோன்ற பெரிய நெருக்கடியில், யாருக்கும் எந்த அசௌகரியமும் ஏற்படவில்லை என்று நிச்சயமாக சொல்ல முடியாது தான். நமது தொழிலாளர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், கைவினைஞர்கள், கைத்தொழில் செய்பவர்கள், சிறு தொழில் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள், சாலையோர வியாபாரிகள் மற்றும் அவர்களைப் போன்றவர்களுக்கு எண்ணற்ற துன்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. நமது பிரச்சினைகளை அகற்றுவதற்காக, நாம் ஒன்றுபட்டு உறுதியுடன் செயல்பட்டு வருகிறோம்.

இருந்தபோதிலும், இப்போது நாம் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் பேரழிவாக மாறிவிடாமல் இருப்பதை உறுதி செய்வதில் நாம் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும். எனவே, அனைத்து விதிகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் ஒவ்வொரு இந்தியரும் பின்பற்ற வேண்டியது மிகவும் முக்கியம். நாம் வெற்றியின் பாதையில் செல்லத் தொடங்கியுள்ளோம். வெற்றி என்பது தான் நமது கூட்டு தீர்மானமாக இருக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு எதிராக தனது ஒற்றுமை மற்றும் உறுதியை வெளிப்படுத்தி உலகிற்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியதைப் போல, பொருளாதார மீட்டுருவாக்கத்திலும் நாம் முன்னுதாரணத்தை ஏற்படுத்துவோம். தற்சார்பு இந்தியா திட்டத்துக்காக சமீபத்தில் அறிவித்த ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களின் தொகுப்பு, இந்த இலக்கை நோக்கிய பயணத்தின் முக்கியமான நடவடிக்கை ஆகும்.

130 கோடி மக்களின் தற்போதைய நிலையும், எதிர்காலமும் எதிர்மறை விஷயங்களால் ஒருபோதும் பாதிக்கப்பட்டு விடாது என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.நமது தற்போதைய நிலை மற்றும் எதிர்காலத்தை நாமே முடிவு செய்வோம். முன்னேற்றத்தின் பாதையில் நாம் முன்னேறிச் செல்வோம், வெற்றி நமதாக இருக்கும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார் பிரதமர்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *