பாதுகாப்பு வழங்க வேண்டும்: ஆளுநருக்கு தீபா கோரிக்கை!

politics

அச்சுறுத்தல் இருப்பதால் தனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கடந்த 23ஆம் தேதி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, ஆளுநரைச் சந்தித்து முறையிடவுள்ளதாக அறிவித்தார். இதனிடையே ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிப்பது தொடர்பான வழக்கின் தீர்ப்பில் ஜெயலலிதாவின் இரண்டாம் நிலை வாரிசுகளாக தீபா, தீபக் அறிவிக்கப்பட்டனர். இன்று அந்த வழக்கின் தீர்ப்பு திருத்தப்பட்டு, நேரடி வாரிசுகளாகவே அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் சென்னையில் இன்று (மே 29) செய்தியாளர்களை சந்தித்த தீபா, “ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என அறிவித்து எங்களுக்கு முழு அதிகாரத்தை நீதிமன்றம் வழங்கியுள்ளது. உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை. இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டும் என்று அதிமுக நினைக்கிறது. எங்களை வாரிசுகளாக அறிவித்த தோல்வியைத் தாங்க முடியாமல், அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை அரசு கூறுகிறது” என்று குற்றம்சாட்டினார்.

போயஸ் இல்லத்திற்கு தான் செல்ல கூடாது என்பதில் யாருக்கோ உள்நோக்கம் இருப்பதாகக் குறிப்பிட்ட தீபா, “தீர்ப்பு வந்தபிறகும் கூட போயஸ் இல்ல வாசலுக்கு வரக்கூடாது என்கிறார்கள். போயஸ் தோட்ட சாலை என்பது அனைவரும் பயன்படுத்துவதற்காகத்தான் என்பது அரசுக்குத் தெரியாதா? என் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்துவார்கள் என்பது நான் எதிர்பார்த்ததுதான். அது இன்றைக்கே நடந்தது அதிர்ச்சியளித்தது. இருந்தாலும் அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று கூறினார்.

ஊரடங்கு நேரத்தில் வேதா இல்லம் முன்பு சென்றது தவறு என்கிறார்கள். இந்த ஊரடங்கு நேரத்தில் நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்க வேண்டிய அவசியம் என்ன என்று கேள்வி எழுப்பிய அவர், “எனக்கு பாதுகாப்பு வழங்கும்படி ஆளுநரிடம் கேட்டுக்கொள்கிறேன். ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று நான் சொல்லவில்லை. துணை முதல்வர் பன்னீர்செல்வம்தான் கூறினார். நான் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தேன். அவர் ஆஜராகினாரா? அதிமுக சார்பில் யாராவது ஆஜரானார்களா?. அரசியல் ஆதாயத்திற்காக நாங்கள் வரவில்லை. ஜெயலலிதாவின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நாங்கள்” என்றும் குறிப்பிட்டார்.

மேலும், “ஜெயலலிதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றப்போகிறேன் என்று எவ்வளவு நாள் மக்களையும், அதிமுக தொண்டர்களையும் ஏமாற்றுவார்கள். எடப்பாடியும், பன்னீர்செல்வமும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களும் இல்லை, அதிமுக தொண்டர்களாலும் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நேரடி வாரிசுகள் என்று அறிவித்துள்ள நிலையில், வேதா இல்லம் உள்பட ஜெயலலிதாவின் சொத்துக்கள் அனைத்தையும் எங்களிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால், எங்கள் மீது அவதூறு பரப்புகிறார்கள். அவசரச் சட்டத்தை எதிர்த்து முறையீடு செய்யவுள்ளேன்” என்றும் தீபா குறிப்பிட்டார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *