மின்னம்பலம் மின்னம்பலம்
புதன், 5 ஆக 2020

ஆர்.எஸ்.பாரதிக்கு நெருக்கடி: அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்!

ஆர்.எஸ்.பாரதிக்கு நெருக்கடி: அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்!

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார்.

இதுதொடர்பாக பட்டியலின மக்களை விமர்சித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு ஆர்.எஸ்.பாரதி கடந்த 23ஆம் தேதி அதிகாலை கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், முதல் தகவல் அறிக்கை மீதான ரிமாண்டை ஜூன் 1ஆம் தேதி வரை நிறுத்தி வைத்து நீதிபதி உத்தரவிட்டதால் உடனே விடுவிக்கப்பட்டார்.

ஆர்.எஸ்.பாரதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு வழக்கறிஞர் ஆண்டனி ராஜ் என்பவர் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணனிடம் இன்று (மே 29) மனு அளித்தார். அதில், ‘நீதிபதிகள் தங்கள் திறமையால் அல்லாமல் அரசியல் கட்சிகளின் ஆதரவால் பதவிக்கு வருகிறார்கள் என்பதைப் போன்று ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு இருந்தது. இது நீதித் துறையை அவமதிப்பது போல இருப்பதால் அவர் மீது வழக்கு தொடர அனுமதி வேண்டும்’ என வலியுறுத்தி இருந்தார்.

இதனை விசாரித்த அரசு தலைமை வழக்கறிஞர், ஆர்.எஸ்.பாரதிக்கு அனுப்பிய நோட்டீஸில், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியது தொடர்பாக, ஏன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க கூடாது என்பது குறித்து 2 வாரங்களில் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

எழில்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon