மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்!

தீபா, தீபக் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள்!

தீபா, தீபக்கை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் தாங்கள்தான் என அவரது அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகள் தீபா, தீபக் இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். ஆனால், வாரிசை அறிய வேண்டியுள்ளதாக பத்திரிகை செய்தி வெளியிட்ட தமிழக அரசு, ஜெயலலிதா வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற கடந்த 23ஆம் தேதி அவசரச் சட்டம் பிறப்பித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ஆளுநரைச் சந்தித்து முறையிடவுள்ளதாக தீபா அறிவித்தார்.

இந்த நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க அவரின் அண்ணன் மகளான ஜெ. தீபா மற்றும் ஜெ. தீபக் ஆகியோருக்கும் உரிமையுள்ளது என்று தெரிவித்து அவர்களை இரண்டாம் நிலை வாரிசுகளாக அறிவித்தது.

இந்த நிலையில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல் குத்தூஸ் அமர்வு இந்த அறிவிப்பில் இன்று (மே 29) திருத்தம் செய்துள்ளது. வாரிசுரிமை சட்டப்படி இரண்டாம் நிலை வாரிசுகளாக கருதக்கூடாது, வாரிசுகளாகவே கருதலாம் என தங்களுக்கு வந்த பரிந்துரைகளை பரிசீலித்தும், நீதிமன்ற தீர்ப்புகளை ஆராய்ந்தும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்காக பட்டியலிடப்பட்ட போது, நீதிபதிகள் முன்பு ஆஜரான அரசு தரப்பு வழக்கறிஞர், “வாரிசு என்று அறிவிக்கப்பட்டதும் வேதா இல்லத்திற்குள் நுழைய தீபா முயற்சிக்கிறார். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான விவகாரம் நிலுவையில் இருந்து வரும் நிலையில், தீபாவின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அவர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்” என்று தெரிவித்தார்.

இதனைக் கேட்டுக்கொண்ட நீதிபதிகள், “தீர்ப்பு வந்தாலும் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஆகவே நீதிமன்ற தீர்ப்பு முழுமையாக கையில் கிடைக்கும் வரை இதுபோன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம்” என தீபா தரப்புக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.

எழில்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon