நாடு முழுவதும் ஜூன் 15 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் நான்காவது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருந்தாலும், கொரோனா பாதிப்பு வெகு வேகமாகப் பரவி வருகிறது. இதுவரை இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் அதிகபட்சமாக 7,466 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,65,799 ஆக உயர்ந்துள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியா 9 ஆவது இடத்துக்கு நகர்ந்துள்ளது.
ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்ததும், சரியான வியூகங்களை வகுக்காததும்தான் கொரோனா பல மடங்கு அதிகரிக்கக் காரணம் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. நாளை மறுநாளுடன் ஊரடங்கு முடிவுக்கு வர இருக்கும் சூழலில் பிரதமர் நரேந்திர மோடியுடன், உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (மே 29) ஆலோசனையில் ஈடுபட்டார்.
ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக முதல்வர்களுடன் தொலைபேசியில் கருத்து கேட்டபிறகு இந்த ஆலோசனை நடைபெற்றது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக சில தளர்வுகளை அறிவித்துவிட்டு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என கருத்தினை மாநில முதல்வர்கள் முன்வைத்திருந்தனர். அதுதொடர்பாகவும் பிரதமருடனான ஆலோசனையில் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் ஏஎன்ஐக்கு அளித்த பேட்டியில், “உள் துறை அமைச்சர் அமித் ஷா என்னைத் தொடர்புகொண்டு ஊரடங்கு தொடர்பாக கருத்து கேட்டார். இன்னும் 15 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றே நினைக்கிறேன். எனினும், ஊரடங்கில் சில தளர்வுகள் இருக்க வேண்டும் என்பது எங்களின் எதிர்பார்ப்பு. உணவகங்கள் சமூக இடைவெளி மற்றும் 50 சதவிகித ஊழியர்களுடன் இயங்க அனுமதிக்க வேண்டும். பலரும் உடற்பயிற்சிக் கூடங்களை மீண்டும் திறக்க வேண்டும் என்று கோருகிறார்கள்” என்று தெரிவித்தார்.
மேலும், “கொரோனா அதிகரிக்கும் வேகத்தைப் பார்க்கும்போது ஊரடங்கு இன்னும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட வேண்டியது அவசியமாகும்” என்றும் கூறினார். உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேசிய பிறகு பிரமோத் சாவந்த் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளது கவனிக்கத்தக்கதாக மாறியுள்ளது.
எழில்