மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 21 ஜன 2021

ஊரடங்கு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!

ஊரடங்கு நீட்டிப்பு: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை!வெற்றிநடை போடும் தமிழகம்

அரசின் வழிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டுமென முதல்வர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் 60 நாட்களுக்கு மேலாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் மாவட்ட ஆட்சியர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று (மே 29) ஆலோசனை நடத்தினார். அப்போது, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் விஜயபாஸ்கர், உதயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.

நாளை மறுநாளுடன் நான்காம் கட்ட ஊரடங்கு முடியவுள்ள நிலையில், ஊரடங்கு நீட்டிப்பதா அல்லது கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளை அறிவிப்பதா என்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர், “இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்திருக்கிறது. சென்னை நெரிசல் நிறைந்த பகுதி என்பதால் கொரோனா பாதிப்பு அதிகமாகியுள்ளது. அரசு எடுத்த நடவடிக்கைகள் காரணமாக கொரோனா வைரஸ் கட்டுக்குள் உள்ளது. வல்லரசு நாடுகளை விட தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதம் குறைவாகவுள்ளது. குணமடைவோர் எண்ணிக்கையும் 50 சதவிகிதமாக இருக்கிறது. கொரோனாவைப் பற்றி மக்கள் அச்சம்கொள்ளத் தேவையில்லை. ஆனால், பாதுகாப்புடனும், கட்டுப்பாட்டுடனும் இருக்க வேண்டும். அரசின் வழிமுறைகளை பின்பற்றினால் கொரோனாவைக் கட்டுப்படுத்த முடியும்” என்று தெரிவித்தார்.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளித்திருக்க முடியும் என்று குறிப்பிட்ட முதல்வர், “மருத்துவர்களின் கடும் முயற்சியின் காரணமாக கொரோனாவால் குணமடைவோர் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே மருத்துவமனையை அணுக வேண்டும். நோய் முற்றிய பிறகு மருத்துவமனைக்கு வந்தால் சிகிச்சை பலனளிக்காமல் போய்விடும்” என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

இன்று எடுக்கப்பட்ட முடிவின் அடிப்படையில் ஊரடங்கு தொடர்பாக அறிவிப்பை தமிழக அரசு வெளியிடவுள்ளது.

எழில்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon