மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 22 ஜன 2021

இடஒதுக்கீடு, கொரோனா: மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டம்!

இடஒதுக்கீடு, கொரோனா: மீண்டும் எதிர்க்கட்சிகள் கூட்டம்!வெற்றிநடை போடும் தமிழகம்

இடஒதுக்கீடு, கொரோனா பாதிப்பு குறித்து விவாதிக்க ஸ்டாலின் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.

அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 50 சதவிகிதம், அகில இந்திய தொகுப்புக்கு மத்திய அரசால் பெறப்படுகிறது. இந்த இடங்களை நிரப்பும்போது, பிற்படுத்தப்பட்டோருக்கான அகில இந்திய ஒதுக்கீடான 27 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக இந்த நடைமுறை முறையாக கடைபிடிக்கப்படுவதில்லை. மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரி திமுக, பாமக ஆகியவை உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன.

இதனிடையே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவிலும், தமிழகத்திலும் வெகு வேகமாகப் பரவி வருகிறது. மத்திய அரசின் வியூகம் சரியில்லாததால்தான் 60 நாட்களாக ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா வேகமாகப் பரவி வருகிறது என்ற எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

இந்த நிலையில் திமுக தலைமைக் கழகம் இன்று (மே 29) வெளியிட்ட அறிவிப்பில், “திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் 31.05.2020 அன்று மாலை 4.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெறும். அதில் மருத்துவக் கல்வியில் இடஒதுக்கீட்டை மறுக்கும் மத்திய அரசின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்கப்படவுள்ளது. அத்துடன், கொரோனா நோய்த் தடுப்பில் மத்திய-மாநில அரசுகளின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளன என விவாதிக்கப்படவுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை முன்வைக்கவுள்ளனர். கூட்டத்தின் முடிவில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.

எழில்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon