மின்னம்பலம் மின்னம்பலம்
வியாழன், 6 ஆக 2020

இந்திய ஊரடங்கு: தீவிர வறுமையில் 1.20 கோடி மக்கள்!

இந்திய ஊரடங்கு:  தீவிர வறுமையில் 1.20 கோடி மக்கள்!

இந்தியாவில் 1.20 கோடி மக்கள் தீவிர வறுமைக்குள் தள்ளப்படுவார்கள் என்று உலக வங்கி ஆய்வு தெரிவிக்கிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலைக் கட்டுப்படுத்த பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் குறிப்பிட்ட காலம் வரை கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த முடிந்தது என்றாலும், அது பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளை உண்டாக்கியது. நிறுவனங்கள் பலவும், வருமான இழப்பை ஈடுகட்ட ஆட்குறைப்பு, சம்பளக் குறைப்பு போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதால் அது மக்களை நேரடியாக பாதித்து வருகிறது.

பொருளாதார பாதிப்பால் உலகம் முழுவதும் குறைந்தது 4.90 கோடி மக்கள் தீவிர வறுமையில் சிக்குவார்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இந்த பாதிப்புகளை சந்திக்கப்போகும் மக்கள் ஒருநாளைக்கு 1.90 டாலருக்குக் (ரூ. 140) குறைவான வருவாயை ஈட்டுபவர்கள்.

அதேபோல இந்தியாவில் சுமார் 1.20 கோடி மக்கள் தீவிர வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கியின் ஆய்வு மதிப்பிட்டுள்ளது. தினசரி கூலித் தொழிலாளர்கள், வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள், சிறு நிறுவனங்களில் வேலை செய்பவர்கள் உள்ளிட்டோர்தான் இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவர்.

“இந்தியாவில் வறுமையை ஒழிக்க கடந்த காலத்தில் அரசுகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் சில மாதங்களாக நிலவி வரும் ஊரடங்கால் பின்னடைவைச் சந்திக்கலாம்” என ஐபிஇ குளோபல் ஆலோசனை நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அஷ்வஜித் சிங் தெரிவிக்கிறார். மேலும், கொரோனா வைரஸை விட பசியால் அதிகமான மக்கள் இறக்கக்கூடும் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

சமீபத்தில், உலக வங்கியின் அறிக்கையொன்றில், மிகவும் ஏழை மக்களைக் கொண்ட நாடு என்ற நிலையை இழப்பதற்கு நெருக்கமான இடத்தில் இந்தியா இருப்பதாகவும், குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, ஊரடங்கால் இந்தியா பழைய நிலைமைக்கே திரும்ப வாய்ப்புள்ளது.

உலக வங்கி மற்றும் இந்திய பொருளாதார கண்காணிப்பு மையத்தின் அறிக்கைகள், நாட்டில் 80 சதவிகிதத்திற்கு மேற்பட்ட குடும்பங்கள் வருமான வீழ்ச்சியை சந்தித்துள்ளதாகக் கூறுகின்றன. இதற்கு ஊரடங்குதான் மிக முக்கிய காரணம். இவர்கள் அரசின் உதவி இல்லாமல் நீண்ட நாட்கள் தாக்குப்பிடிக்கவோ, மீளவோ முடியாது என்றும் அறிக்கை கூறுகிறது.

13 கோடி குடும்பங்களுக்கு தலா 7,500 ரூபாயை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த ஆய்வு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாக உள்ளது.

எழில்

வெள்ளி, 29 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon