மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

ஜாபர் சேட் மாற்றம்: பின்னணியில் செந்தில்பாலாஜி

ஜாபர் சேட் மாற்றம்: பின்னணியில் செந்தில்பாலாஜி

சிபிசிஐடி போலீஸ் டிஜிபியாக பதவி வகித்த மூத்த போலீஸ் அதிகாரி ஜாபர் சேட், இன்று (மே 26) அப்பதவிவியில் இருந்து மாற்றப்பட்டு குடிமைப் பொருள் வழங்குதுறை புலனாய்வு டிஜிபியாக நியமிக்கப்பட்டிருக்கிறார். தமிழகத்தின் டிஜிபி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் போன்ற முக்கிய பதவிகளுக்கு இவர் பெயர் ஏற்கனவே பேசப்படும் அளவுக்கு முக்கிய அதிகாரியாக இருந்தார் ஜாபர் சேட். வரும் டிசம்பர் மாதம் ஓய்வு பெற உள்ள நிலையில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த சிபிசிஐடி தலைவர் பதவியில் இருந்து அவர் மாற்றப்பட்டிருப்பது அதிகாரிகள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.

இந்த திடீர் மாற்றத்துக்கான மூலக் காரணம் கரூரில் இருந்து கிளம்பியிருக்கிறது என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். இதுகுறித்து விசாரித்தபோது,

“ஒருங்கிணைவோம் வா திட்டத்தின் கீழ் திமுக சார்பில் பெறப்பட்ட கோரிக்கை மனுக்களை அந்தந்த மாவட்ட கலெக்டர்களிடம் ஒப்படைக்கச் சொல்லியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் கரூர் மாவட்டப் பொறுப்பாளர் செந்தில்பாலாஜி, அம்மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து மே 12 ஆம் தேதி மக்களின் மனுக்களை அளித்தார். பின் அவர் நிருபர்களுக்கு பேட்டியளிக்கையில், ‘மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களுக்கு அரவக்குறிச்சி எம்.எல்.ஏ.வான என்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ. ராமர், கரூர் எம்.பி. ஜோதிமணியையோ கலெக்டர் அழைப்பதில்லை. ஆனால், கிரு‌‌ஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. கீதா, மற்றும் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் பங்கேற்கிறார்கள் இது குறித்து கலெக்டரிடம் கேட்டபோது, ‘அவர்கள் தகவல் கிடைத்து வருகின்றனர். உங்களுக்கு தகவல் தெரிந்தால் நீங்களும் கலந்து கொள்ளுங்கள்’ என்று கூறுகிறார். கலெக்டர் பக்குவம் இல்லாமல் பேசுகிறார். இனி கூட்டங்களுக்கு என்னை அழைக்காவிட்டால், கலெக்டர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில், அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும்” என்று அறிவித்தார்.

இதையடுத்து செந்தில்பாலாஜிக்கு எதிராக மே 16 ஆம் தேதி கலெக்டர் அன்பழகன் தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் தன்னை மிரட்டுவதாக புகார் கொடுத்தார். இந்த புகாரின்பேரில் 5 பேருக்கு மேல் கூட்டமாக வந்தது, ஊரடங்கை மீறியது, தகாத வார்த்தைகளால் திட்டியது, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது என 5 பிரிவுகளின் கீழ் செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் எப்படியாவது செந்தில்பாலாஜியை கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தீவிரமாக இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மே 23 ஆம் தேதி கரூர் கலெக்டரை மிரட்டியதாக செந்தில்பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. கரூரில் இருந்து இந்த வழக்கு சென்னைக்கு மாற்றப்பட்டதே உடனடியாக இந்த வழக்கில் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட வேண்டும் என்பதற்காகத்தான். இதுகுறித்து மாவட்ட அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால், சிபிசிஐடி போலீஸ் தரப்பில், ‘இந்த புகாரின் கீழ் உடனடி கைது நடவடிக்கை மேற்கொள்ள முகாந்திரமில்லை. ஒரு பேட்டியின் அடிப்படையில் பணி செய்வதற்கு இடையூறு என்றோ, கலெக்டருக்கு மிரட்டல் என்றோ நிரூபிக்க இயலாது’ என்று எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். செந்தில்பாலாஜியை கைது செய்தே ஆக வேண்டும் என்ற அரசியல் அழுத்தத்துக்கு உடனடியாக இசைவு தெரிவிக்காத நிலையில்தான் சிபிசிஐடி தலைவர் ஜாபர் சேட் அந்தப் பதவியில் இருந்து மாற்றப்பட்டார்” என்று முடித்தார்கள் காவல்துறையிலேயே.

-வேந்தன்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon