மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வெள்ளி, 18 செப் 2020

இலவச மின்சாரம் ரத்து: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

இலவச மின்சாரம் ரத்து: தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!

இலவச மின்சார ரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு மின்சார சட்ட திருத்த மசோதாவை கொண்டுவந்து, மாநிலங்களின் கருத்தை அறிவதற்காக அனுப்பியுள்ளது. இது தமிழக விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் விதமாக அமைந்துள்ளது. ஆகவே, இதற்கு தமிழக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதுதொடர்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இலவச மின்சாரத்தை பறிக்கும் மத்திய அரசையும், அதை தடுத்து நிறுத்த துணிவற்ற மாநில அரசையும் கண்டித்து தமிழகம் முழுவதும் 5 பேருக்கு மிகாமல் கையில் கறுப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்தார்.

சென்னையிலுள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். அப்போது விவசாயிகளை பழிவாங்கக் கூடாது என்றும், மாநில உரிமைகளைத் தாரை வார்கக் கூடாது உள்ளிட்ட முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சென்னை அண்ணா நகர் சாந்தி காலனியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்குக் காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தலைமை வகித்தார். இதில் திருச்சி மக்களவை உறுப்பினர் திருநாவுக்கரசர், சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வீரபாண்டியன் உள்ளிட்டோர் சமூக இடைவெளியுடன் கலந்துகொண்டு மின்சார சட்டத் திருத்தத்தை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர். ஆவடியில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.பி ஜெயக்குமாரும், தண்டையார்பேட்டையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் வசந்தகுமாரும் கலந்துகொண்டனர்.

விருதுநகர் ரயில் நிலையம் முன்பாக நடந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களவை காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட 5 பேர் கலந்துகொண்டு முழக்கங்கள் எழுப்பினர்.

இதுபோலவே தமிழகம் முழுவதும் வட்டாரங்கள், நகரங்கள், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், அஞ்சலகங்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், மின்சார அலுவலகங்கள் முன்பு காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் 5 நிமிடத்திலேயே இந்த கண்டன ஆர்ப்பாட்டங்கள் நிறைவுக்கு வந்தன.

எழில்

செவ்வாய், 26 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon