மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

‘ஒருநாள் மாசெ’வான ராஜேந்திரபாலாஜி: விளம்பர அரசியல்?

 ‘ஒருநாள் மாசெ’வான ராஜேந்திரபாலாஜி: விளம்பர அரசியல்?

அதிமுகவின் அதிகாரபூர்வ நாளேடான நமது அம்மா இதழ் நேற்று மே 23 ஆம் தேதி , விளம்பரச் சிறப்பிதழாகவே இருந்தது. ஏனெனில் அதிமுக அரசின் 5 ஆம் ஆண்டு தொடக்க நாள் மே 23 என்பதால் அன்று அமைச்சர்கள் அனைவரும் அரசுக்கு வாழ்த்து தெரிவித்து விளம்பரங்களை வெளிளியிட்டிருந்தனர்.

இதில் 27 ஆம் பக்கத்தில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் வாழ்த்து விளம்பரம் வெளிவந்திருந்தது. அதைப் பார்த்து சக அமைச்சர்களுக்கும், மாசெக்களுக்கும் விருதுநகர் மாவட்ட அதிமுக பிரமுகர்களுக்கும் அதிர்ச்சி. ஏனென்றால், அந்த விளம்பரத்தில் ராஜேந்திரபாலாஜியின் பெயருக்குக் கீழே விருதுநகர் மாவட்டக் கழகச் செயலாளர், பால் வளத்துறை அமைச்சர் என்று அச்சிடப்பட்டிருந்தது. அதைப் பார்த்துதான் பலருக்கும் அதிர்ச்சி. மார்ச் 23 ஆம் தேதியே ராஜேந்திரபாலாஜியை மாசெ பதவியில் இருந்து விடுவித்துவிட்ட நிலையில், கட்சியின் அதிகாரபூர்வ நாளேட்டில் வரும் விளம்பரத்தில் எப்படி மாவட்டச் செயலாளர் என்று வரும்? அப்படியென்றால் இவர்தான் மாசெவா என்று பலரும் கேள்விகளை பலரும் பகிர்ந்துகொண்டனர்.

இந்தத் தகவல் நமது அம்மா அலுவலகத்துக்கும் தெரியப்படுத்தப்பட்டது. இதையடுத்து மறு நாளான இன்று (மே 24) போயஸ் கார்டன் வேதா இல்லத்தை அரசு இல்லமாக மாற்றியதற்காக நன்றி தெரிவித்து நேற்றைய பாணியிலேயே விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. அதே 27 ஆம் பக்கத்தில் ராஜேந்திரபாலாஜியின் விளம்பரம் இடம்பெற்றது. இதில் மிக கவனமாக ராஜேந்திரபாலாஜி என்ற பெயருக்குக் கீழ் பால் வளத்துறை அமைச்சர் என்ற வாசகம் மட்டுமே இடம்பெற்றது.

“எப்படியாவது மாசெ பதவியை திரும்ப வாங்கிடுவேன்” என்று ராஜேந்திரபாலாஜி தனது ஆதரவாளர்களிடம் சொல்லி வந்த நிலையில்... இந்த விளம்பர வாசகங்கள் என்பது தற்செயலா அல்லது அமைச்சரின் அறிதலோடு, விளம்பரப் பிரிவினரால் வேண்டுமென்றே செய்யப்பட்டதா என்பது பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்று அதிமுக வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

-வேந்தன்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon