மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

டி.ஆர்.பாலு, தயாநிதி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டி.ஆர்.பாலு, தயாநிதி: நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் வழக்கில் காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

பட்டியலின மக்களை இழிவுபடுத்தியதாகக் கூறி கோவையைச் சேர்ந்த சேகர் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் கோவை வெரைட்டி ஹால் காவல் நிலையத்தில் தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே பட்டியலின மக்களை விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஆர்.எஸ்.பாரதி நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டு பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்பட்டதால் தாங்களும் கைது செய்யப்படலாம் என்று தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் மனுத் தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு நீதிபதி நிர்மல்குமார் அமர்வில் விசாரிக்கப்பட்டது.

அப்போது, திமுக எம்.பி.க்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கிலேயே வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் தரப்புக்கு எதிராக புகார் அளித்தவர் அனுமன் சேனா அமைப்பைச் சேர்ந்தவர். ஆகவே, இதில் அரசியல் உள்நோக்கம் உள்ளது” என்று வாதிட்டார்.

மேலும், “ஒன்றிணைவோம் வா திட்டத்தில் பெறப்பட்ட லட்சக்கணக்கான புகார்கள் மீது நடவடிக்கை கோரிதான் தலைமைச் செயலாளரைச் சந்தித்தோம். ஆனால், அவரோ எங்களை முறையாக நடத்தவே இல்லை. தலைமைச் செயலாளரின் அறிவுறுத்தலின்படியே எங்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது” என்றும் தெரிவிக்கப்பட்டது.

காவல் துறை தரப்பில் ஆஜரான குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், “பட்டியலின மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் உள்நோக்கத்துடன் பேசியுள்ளதால் கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, கோவையில் தொடரப்பட்ட வழக்கில் தற்போதைய நிலையே தொடர வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும், டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் என இருவரும் மீதும் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்று கூறியதுடன், இதுதொடர்பாக காவல் துறை பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை வரும் 29ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

எழில்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon