மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

அதிமுக ஊழல்களை பட்டியலிட குழு: திமுக தீர்மானம்!

அதிமுக ஊழல்களை பட்டியலிட குழு: திமுக தீர்மானம்!

அதிமுக அரசின் ஊழல்களை பட்டியலிட குழு அமைக்கப்படும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி நேற்று அதிகாலை திடீரென கைது செய்யப்பட்டார். பட்டியலினத்தோரை அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில், இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுபோன்று டி.ஆர்.பாலு, தயாநிதி மாறன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் உயர் நீதிமன்றத்தை நாடினர். மேலும், தமிழகத்தின் பல இடங்களில் திமுக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப அணியினர் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதுதொடர்பாக விவாதிப்பதற்காக திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் காணொலிக் காட்சி வாயிலாக இன்று (மே 24) காலை நடைபெற்றது. கூட்டம் துவங்கியதும், துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட அந்தியூர் செல்வராஜுக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. ஆர்.எஸ்.பாரதிக்கு இடைக்கால ஜாமீன் பெற்றிட நீதிமன்றத்தில் வாதாடிய திமுக சட்டத்துறைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஒன்றிணைவோம் வா திட்டத்திற்கு வந்த ஆதரவைப் பொறுத்துக்கொள்ள முடியாமலும், கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் முழுத் தோல்வியடைந்துவிட்ட விரக்தியிலும் குரோதத்திலும் - திமுக நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மீதும், பொய் வழக்குப் போட்டு கைது செய்யும் படலத்தைத் தொடங்கியிருப்பதாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்த அனைத்தும் ஜனநாயக விரோத, தன்னிச்சையான, அராஜகச் செயல்கள் என்பதை விட - கருத்துச் சுதந்திரத்தையும், அரசியல் கட்சிகளின் ஜனநாயக முறையிலான செயல்பாட்டையும், கெட்ட எண்ணத்துடன் தடுக்கும் கேடுகெட்ட, அதிகார துஷ்பிரயோகம் ஆகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், “திமுகவினர் மீது வழக்குப் போடுவதற்கும், கைது செய்வதற்கும், உள்ளாட்சியின் ஊழல் அமைச்சராக இருக்கும் வேலுமணி, போலீஸ் துறைக்கும் நிஜ அமைச்சராகச் செயல்படுவதும் - அவருக்கு காவல்துறை அதிகாரிகள் கைகட்டி நின்று கட்டளைகளை ஏற்றுச் சேவகம் செய்வதும், இன்றைக்கு எளிதாகவும் இன்பமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்கு சட்டத்தின் முன்பு தகுந்த பதிலைச் சொல்ல வேண்டிய கடினமான துன்ப காலம் வேலுமணிக்கும், அவருக்கு விரும்பித் துணை போகும் காவல்துறை அதிகாரிகளுக்கும், வெகு தொலைவில் இல்லை என்பதை மாவட்டச் செயலாளர்களின் இந்தக் கூட்டம் கடுமையாக எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளது” என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து, “இதுபோன்ற ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கோ - அச்சுறுத்தலுக்கோ இந்த இயக்கம் என்றைக்கும் அஞ்சாது. , இந்த இயக்கத்திற்காக ஓயாது உழைத்திடும், உயிரினும் மேலான ஒவ்வொரு தொண்டரையும் காப்பாற்றிடும் பொருட்டு, திமுக நேரடியாகக் களம் காணும் மாபெரும் போராட்டத்தை அதிமுக அரசு சந்திக்க நேரிடும்” என்று எச்சரிக்கப்பட்டுள்ள அதில்,

“எடப்பாடி அரசின் அநீதியைத் தட்டிக் கேட்கவும், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாதிக்கப்படும் கட்சித் தொண்டர்களை அடக்குமுறையிலிருந்து அரவணைத்துப் பாதுகாக்கவும், அதிமுக அரசின் ஊழல்களை மாவட்ட வாரியாகப் பட்டியலிடவும், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் வழக்கறிஞர்கள் குழு அமைப்பது என்றும்; மாவட்டச் செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்களின் இந்தக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது” என்றும் கூறியுள்ளது.

எழில்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon