மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

கிளைச் செயலாளர்களுக்கு எடப்பாடி தந்த பரிசு!

கிளைச் செயலாளர்களுக்கு எடப்பாடி தந்த பரிசு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மே 22 ஆம் தேதி இரவு தனது சொந்த மாவட்டமான சேலத்துக்குப் புறப்பட்டுச் சென்றார். மே 24 ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்தில், கொரோனா பரவல் மற்றும் குடிமராமத்துப் பணிகள் பற்றி அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

இதன் பின் நெடுஞ்சாலை நகரிலுள்ள தனது வீட்டில் கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அப்போது எடப்பாடி தொகுதியில் தான் விநியோகிக்கச் சொன்ன அரிசி அனைவருக்கும் முறையாக சென்று சேர்ந்திருக்கிறதா என்று விசாரித்துள்ளார். இதுபற்றி மின்னம்பலத்தில், எடப்பாடி தொகுதியில் முதல்வர் பெயரைக் கெடுப்பது யார்? என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம். அச்செய்தியில் முதல்வர் கொடுக்கும் அரிசி அதிமுகவினருக்கு மட்டுமே வழங்கப்படுவதாக எழுந்த புகார்களை குறிப்பிட்டிருந்தோம். இதன் பின் உடனடியாக தனியாக ஒரு குழு அமைத்து அரிசி விநியோகப் பணிகளை கவனிக்க உத்தரவிட்டார் எடப்பாடி. இந்தப் பின்னணியில் சேலம் வந்த நிலையில் அரிசியில் ரேஷன் அரிசி கலந்தது உள்ளிட்ட புகார்கள் பற்றியும் விசாரித்துள்ளார். கட்சிப் பிரமுகர்களும் இது தொடர்பாக முதல்வரிடம் விளக்கமாக கூறியுள்ளனர். சில நிர்வாகிகளைக் கடிந்துகொண்டிருக்கிறார்.

இதையடுத்து, ‘பெரும்பாலான இடங்களில் அரிசி விநியோகம் செம்மையாக சென்று அடைந்துள்ளது. இதற்குக் காரணமான கிளைச் செயலாளர்களுக்கு ஏதாவது உதவலாம்’ என்று மாவட்ட நிர்வாகிகள் கூற அதை உடனே ஒப்புக் கொண்டிருக்கிறார் முதல்வர். இதன்படி எடப்பாடி சட்டமன்றத் தொகுதியிள்ள கிளைச் செயலாளர்கள் உள்ளிட்ட 3,150 நிர்வாகிகளுக்கு தலா பத்து கிலோ அரிசியும், ஆயிரம் ரூபாய் ரொக்கமும் தன் சொந்த செலவில் உடனடியாக வழங்கச் சொல்லியிருக்கிறார் எடப்பாடி. இதன் முதல் கட்டமாக எடப்பாடி நகரத்துக்குட்பட்ட அதிமுக நிர்வாகிகளுக்கான நிவாரணப் பொருட்களை நேற்று முதல்வரே வழங்கினார்.

கிளைச் செயலாளர்கள் மீது அதிக கவனம் செலுத்தி வருவது என்பது தேர்தல் நெருங்குவதையே காட்டுகிறது என்கிறார்கள் சேலம் அதிமுகவினர்.

-வேந்தன்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon