மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, புதன், 23 செப் 2020

ஊரடங்கால் ரூ.35,000 கோடி இழப்பு: முதல்வர் தகவல்!

ஊரடங்கால் ரூ.35,000 கோடி இழப்பு: முதல்வர் தகவல்!

ஊரடங்கின் காரணமாகத் தமிழகத்தில் ஜிஎஸ்டி வருவாயில் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

15ஆவது நிதிக் குழு பரிந்துரையின் பேரில் மாநிலங்களுக்கான ஏப்ரல் மாத நிதிப் பங்கீடு 46,038.10 கோடி ரூபாயை மத்திய நிதித் துறை அமைச்சகம் விடுவித்தது. உற்பத்தி மாநிலமாகவும், ஜிஎஸ்டி வரியை அதிகமாக அளிக்கும் மாநிலமாகவும் உள்ள தமிழகத்துக்கு அதில் 1928.56 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கியது. கடந்த 20ஆம் தேதி மத்திய வரிகளுக்கான மாநில நிதிப் பகிர்வின் தவணைத் தொகை ரூ.46,038.70 கோடி விடுவிக்கப்பட்டது. அதிலும், 1,928.56 கோடிதான் ஒதுக்கப்பட்டது.

கொரோனா தடுப்புப் பணிகளுக்கு 9,000 கோடி தேவைப்படுவதாகப் பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பலமுறை வலியுறுத்திய நிலையில், மிகவும் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் சேலத்தில் நேற்று ஆய்வில் ஈடுபட்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் மத்திய அரசு போதுமான நிதியைத் தமிழகத்துக்கு வழங்கியுள்ளதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு, “மத்திய அரசு படிப்படியாக நிதியை வழங்கிக்கொண்டிருக்கிறது. ஆனால், தமிழகம் கேட்ட அளவுக்கு நமக்கு நிதி கிடைக்கவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

கொரோனா பாதிப்பின் காரணமாகத் தமிழக அரசு கடும் நிதி நெருக்கடியில் உள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் தமிழகத்துக்கான ஜிஎஸ்டி வரி வருவாயைக் கூட மத்திய அரசு தராமல் இருக்கிறதே என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “கொரோனா காரணமாகத் தமிழகம் மட்டுமல்ல; வல்லரசு நாடுகள் உட்பட உலகமே நிதி நெருக்கடியில் இருக்கிறது. தமிழகத்துக்கு வர வேண்டிய ஜிஎஸ்டி நிதியைக் கொடுப்பதாகத் தெரிவித்திருக்கிறார்கள். சிறிது சிறிதாகக் கொடுத்துக்கொண்டு இருக்கிறார்கள்” என்று கூறினார்.

மேலும், “தமிழகத்தின் ஜிஎஸ்டி வருவாய் மார்ச்சில் 6 நாட்கள், ஏப்ரல், மே மாதங்களில் குறைந்துவிட்டது. சுமார் ரூ. 35,000 கோடி இழப்பு ஏற்படும் என நிதித் துறை கூறியுள்ளது. இதை சரிகட்ட சிக்கன நடவடிக்கைகள் உட்பட பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. அதே நேரத்தில் வளர்ச்சிப் பணிகளையும் குறையாமல் பார்த்துக்கொள்வோம். அப்படி இருந்தால்தான் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். அப்படி நடக்கும்போதுதான் பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆகவே, அந்த வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

எழில்

ஞாயிறு, 24 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon