மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

டாக்டர் வெங்கடேஷை வாழ்த்திய அமைச்சர்கள்!

டாக்டர் வெங்கடேஷை வாழ்த்திய அமைச்சர்கள்!வெற்றிநடை போடும் தமிழகம்

டாக்டர் வெங்கடேஷ் என்ற பெயரை அதிமுக, அமமுக வட்டாரங்களில் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. சசிகலாவின் அண்ணன் மகனான டாக்டர் வெங்கடேஷ் அதிமுகவில் ஜெயலலிதா காலத்தில் தொடங்கப்பட்ட இளைஞர், இளம்பெண்கள் பாசறையில் முக்கியப் பங்கு வகித்தவர். அதன் பின் ஜெ.வின் நடவடிக்கைக்கும் உள்ளானவர். இன்று அதிமுக அரசில் அமைச்சர்களாக இருக்கும் நடுத்தரவயதினர் பலருக்கு டாக்டர் வெங்கடேஷ் நல்ல பரிச்சயமானவர். அமமுகவிலும் இளைஞர் பாசறையின் பொறுப்பாளராக இருந்தவர் இப்போது ஆக்டிவான அரசியலில் இல்லை.

இந்த நிலையில் கடந்த மே 18 ஆம் தேதி டாக்டர் வெங்கடேஷின் பிறந்தநாளை ஒட்டி அவருக்கு அதிமுக அரசின் அமைச்சர்களில் கணிசமானோர் வாட்ஸ் அப் காலில் வாழ்த்துகள் சொல்லியிருக்கிறார்கள். பாசறையில் அறிமுகமான பழக்கத்தை இன்று வரை தொடரும் அமைச்சர்களில் அவ்வப்போது தாடியை வைத்து முழுதாய் எடுக்கும் தென் மாவட்ட அமைச்சர், இனிஷியலோடு அடையாளப்படுத்தப்படும் வட மாவட்ட. டெல்டா அமைச்சர்கள், மூத்த தென் மாவட்ட அமைச்சர், கட்சி ரீதியாக அதிகாரம் பறிக்கப்பட்ட அமைச்சர் என்று வெங்கடேஷுக்கு வாழ்த்து சொன்னவர்களின் பட்டியல் நீள்கிறது.

இதுகுறித்து அதிமுக வட்டாரத்தில் பேசினோம்.

“தினகரனுக்கும் வெங்கடேஷுக்கும் சுமுகமான உறவு இருக்கிறது என்று சிலரும் இல்லையென்று சிலரும் கூறி வருகிறார்கள். இந்த நிலையில் அவரது பிறந்தநாளை ஒட்டி அமைச்சர்கள் தொடர்புகொண்டு வாழ்த்திவிட்டு பழைய விஷயங்கள் சிலவற்றை நினைவுபடுத்தியிருக்கிறார்கள். அடுத்த சில மாதங்களில் அதிமுகவுக்குள் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு கட்சியின் பல மட்டங்களிலும் இருக்கும் நிலையில் அமைச்சர்களின் இந்த வாழ்த்தில் 100 சதவிகிதம் அரசியல் இருக்கிறது” என்கிறார்கள்.

-வேந்தன்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon