மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 23 மே 2020

பாலு, மாறன் புகார்: தமிழக அரசுக்கு உள்துறை கடிதம்?

பாலு, மாறன் புகார்: தமிழக அரசுக்கு உள்துறை கடிதம்?

தமிழக தலைமைச் செயலாளர் கே. சண்முகம் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்கக் கோரி திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், டி,ஆர்,பாலு ஆகியோர் கடந்த மே 14 ஆம் தேதி நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்கள்.

அந்தக் கடிதத்தில், “மே 13 ஆம் தேதி திமுக எம்பிக்கள் நால்வர் எங்கள் கட்சி செயல்படுத்தி வரும் ஒன்றிணைவோம் வா திட்டம் தொடர்பாக தலைமைச் செயலாளர் கே. சண்முகத்தை சந்திக்கச் சென்றிருந்தோம். அப்போது அவர் எங்களை அவமரியாதையாக நடத்தினார். முன்னாள் மத்திய அமைச்சர் என்றும் பாராமல், நாடாளுமன்ற உறுப்பினர் என்றும் பாராமல் அவமதித்தார். எனவே தமிழக தலைமைச் செயலாளர் மீது நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதித்த குற்றத்துக்காக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியிருந்தனர்.

திமுக எம்பிக்கள் சபாநாயகருக்கு அனுப்பிய கடிதத்தின் மீது அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கோட்டை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

“தமிழக தலைமைச் செயலாளர் மீது திமுக எம்.பி.க்கள் அளித்த புகார் மனுவை சபாநாயகர் அலுவலகம் மத்திய உள்துறைக்கு அனுப்பி வைத்தது. ஐ.ஏ.எஸ்., ஐபிஎஸ் அதிகாரிகள் விவகாரங்களை உள்துறை அமைச்சகம்தான் கையாளுகிறது. அவ்வகையில் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு, தலைமைச் செயலாளர் மீதான புகார் குறித்து ஆய்வு செய்யச் சொல்லியுள்ளது சபாநாயகர் அலுவலகம். இதையடுத்து திமுக எம்பிக்கள் அனுப்பிய புகார் மனுவின் அடிப்படையில், தமிழக அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து கடிதம் வந்திருப்பதாக தெரிகிறது. அதாவது தமிழக அரசுக்கு என்றால் தலைமைச் செயலாளருக்குத்தான்.

இது விளக்கம் கேட்கும் கடிதமாக இருக்கும் என கருதப்படுகிறது. ஏற்கனவே தலைமைச் செயலாளர் இதுகுறித்து விரிவான விளக்கத்தை அறிக்கையாக அளித்திருக்கிறார். அந்த அறிக்கையில், ‘திமுக எம்பிக்கள் வந்தவுடன் வரவேற்று சோபாவில் அமர வைத்தேன். அதே சமயம் சுமார் 15-20 நபர்கள் பெரிய பெரிய மனுக்கள் அடங்கிய கட்டுக்களை எனது அறைக்குள் கொண்டு வந்தனர். கொரோனா நோய் தொற்று பரவி வரும் நிலையில் இத்தனை நபர்கள் எனது அறைக்குள் வந்தது எனக்கு அதிர்ச்சியைத் தந்தாலும், மனுக் கட்டுக்களை அப்படியே வையுங்கள் என்றும், புகைப்படம் எடுப்பதை தவிர்க்கவும் கூறினேன். தேவைப்பட்டால் செய்தியாளர்களுக்கு செய்தியை மட்டும் தெரிவித்துக்கொள்ளுங்கள் என்று கூறினேன். எனினும், சிலர் போட்டோவும் வீடியோவும் எடுத்தனர்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். அவர்களை அவமதிக்கும் வகையில் எதுவும் நடக்கவில்லை என்றும் கூறியிருந்தார்,

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்திருக்கும் கடிதத்துக்கு தலைமைச் செயலாளர் இதே விளக்கத்தை அளிக்கலாம், அல்லது அதோடு கூடுதல் விவரங்களையும் தெரிவிக்கலாம். ஊரடங்கு நேரத்தில் 15-20 நபர்களுடன் அலுவலகத்துக்குள் வந்தது, தன்னை பணி செய்ய விடாமல் தடுத்தது, தன்னைப் பற்றி நாடாளுமன்றத்தின் மூலமாக நடவடிக்கை எடுப்பதாக மிரட்டியது போன்றவற்றை தலைமைச் செயலாளர் மத்திய உள்துறைக்கு எழுதும் விளக்கத்தில் வலியுறுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன. அதைவைத்து டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், கலாநிதி வீராசாமி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்ட திமுக எம்பிகளுக்கு பாஜக சிக்கல் ஏற்படுத்தவும் வாய்ப்புகள் இருக்கின்றன” என்கிறார்கள் கோட்டை வட்டார அதிகாரிகள்.

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? ...

10 நிமிட வாசிப்பு

கைது செய்யத் துணிந்த எஸ்.பி.- வெளிநாடு பறக்கத் தயாராகும் எம்.பி? - சிபிசிஐடி விசாரணைப் பின்னணி!

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் ...

12 நிமிட வாசிப்பு

கொலைப் புகார்: கடலூர் திமுக எம்பியை ராஜினாமா செய்ய ஸ்டாலின் உத்தரவு!

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

3 நிமிட வாசிப்பு

பிடிஆருக்கு ஜிஎஸ்டி கவுன்சிலில் முக்கியப் பொறுப்பு!

சனி 23 மே 2020