மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 16 ஜன 2021

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் எனக்கும் தொடர்பா? எடப்பாடி

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் எனக்கும் தொடர்பா? எடப்பாடி

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கும் அரசுக்கும் சம்பந்தமில்லை என்று முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.

பட்டியலின மக்களை விமர்சித்துப் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (மே 23) அதிகாலை கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிடப்பட்டது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் அளித்ததால் பழிவாங்கும் நடவடிக்கையாக ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார் என ஸ்டாலின் குற்றம்சாட்டியிருந்தார்.

சேலத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “ஆர்.எஸ்.பாரதியை கைது செய்ததற்காக என் மீதும், அரசின் மீது குற்றம்சாட்டி ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இது வேடிக்கையாக இருக்கிறது. பட்டியலினத்தைச் சேர்ந்தவர்களை விமர்சித்து பேசியதால் ஆர்.எஸ்.பாரதி மீது ஆதித்தமிழர் மக்கள் கட்சியைச் சேர்ந்த கல்யாண சுந்தரம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில்தான் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசுக்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது” என்று விளக்கம் அளித்தார்.

வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் ஆதாயத்திற்காக அரசுக்கு எதிராக அவதூறு பிரச்சாரத்தை ஸ்டாலின் மேற்கொள்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும், காவல் துறை சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கும் தனக்கும் என்ன சம்பந்தம் எனவும் கேள்வி எழுப்பிய முதல்வர்,

“அனுதாபத்தை தேடவே இவ்வாறு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். பட்டியலின மக்களை ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசியவுடனேயே எதிர்க்கட்சித் தலைவர் அவரைக் கண்டித்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு அடுத்தவர் மீது பழிசுமத்தி தப்பித்துக்கொள்வது நியாயமில்லை” என்றும் கூறினார்.

மேலும், “ஆர்.எஸ்.பாரதி என்ன விஞ்ஞானியா? என் மீது ஊழல் புகார் கொடுத்ததினால் நடவடிக்கை எடுத்ததாகக் கூறுகிறார். அவர் அப்படி ஒரு புகார் கொடுத்ததாகவே எனக்குத் தெரியவில்லை. ஏதோ சில பேப்பர்களை கொண்டு சென்று புகார் என அளிக்கிறார். அவருடைய புகாரின் உண்மைத் தன்மை அறிந்து ஊடகங்கள் செய்தி வெளியிட வேண்டும்.” என்றும் கூறினார்.

எழில்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon