மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை: முதல்வர்

கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை: முதல்வர்

தமிழகத்தில் கொரோனா சமூகப் பரவலாக மாறவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இரண்டு நாள் பயணமாக சென்னையில் இருந்து கார் மூலம் புறப்பட்டு நேற்று மாலை சேலம் வந்தார். கொரோனா பரவல் தடுப்பு பணி மற்றும் குடிமராமத்து திட்டப்பணிகள் குறித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் இன்று (மே 23) ஆலோசனை நடத்தினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், “கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டோம். கோடைக்காலம் என்பதால் தண்ணீர் பிரச்சினை ஏற்படாமல் பார்த்துக்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினேன். தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டார்.

தொடர்ந்து, “மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். அதற்கு ஆதரவளிக்க மத்திய அரசுக்கு துணை நிற்கிறோம். தமிழகத்தில் 41 அரசு, 26 தனியார் பரிசோதனை நிலையங்கள் என மொத்தம் 67 இடங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. நாள்தோறும் 13,000 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது” என்ற அவர், குடிமராமத்து திட்டத்தை அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை கவனிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்திருப்பதாகவும், பொதுவிநியோகத் திட்டத்தின் மூலம் மக்களுக்கு நலத் திட்ட உதவிகள் சென்று சேர்ந்துள்ளன எனவும் கூறினார்.

மேலும், “கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை. மக்கள் கூடும் இடங்களில்தான் தொற்று இருந்தது. அரசின் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் முழுமையாக பின்பற்ற வேண்டும். கடைகளுக்குச் செல்லும்போது சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும், மாஸ்க் அணிய வேண்டும். கொரோனா வைரஸ் எளிதாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக் கூடியது. பொதுமக்கள் கட்டுப்பாடுடன் இருந்தால்தான் நோய்ப் பரவலைத் தடுக்க முடியும்.” என்றும் கூறினார்.

எழில்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon