மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 3 டிச 2020

தோல்வியை திசைதிருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது: ஸ்டாலின்

தோல்வியை திசைதிருப்பவே ஆர்.எஸ்.பாரதி கைது: ஸ்டாலின்

ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்கு ஸ்டாலின், வைகோ உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தாழ்த்தப்பட்டவர்கள், நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார். எழும்பூர் நீதிமன்ற நீதிபதி நாகராஜன் இல்லத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட அவருக்கு, ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி ஊழல்செய்த துணைமுதல்வர் பன்னீர்செல்வம் மீது புகார் அளித்ததால், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக கைது செய்யப்பட்டிருப்பதாக திமுக குற்றம்சாட்டியது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திமுக தலைவர் ஸ்டாலின், “கொரோனா கால ஊழல், கொரோனா தோல்வி ஆகியவற்றை மூடிமறைக்க குறிப்பாக முதலமைச்சர் என்ற நிலையில் தனது ஊழலையும், தனது நிர்வாகத் தோல்வியையும் திசை திருப்ப வேறு வழி தெரியாமல், குரோத எண்ணத்துடன், ஆர்.எஸ்.பாரதியை அதிகாலையில் கைது செய்துள்ளார் எடப்பாடி திரு. பழனிசாமி” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

பட்டியலின - பழங்குடியின மக்களுக்காக பாடுபடும் திமுகவின் பணிகளை, சிறுபிள்ளைத்தனமான, அரைவேக்காட்டு, அதிகார துஷ்பிரயோகம் மூலம் - எடப்பாடி பழனிசாமியோ, அல்லது அவரை தொலைதூரத்தில் இருந்து இயக்கும் ரிங் மாஸ்டர்களோ களங்கம் கற்பித்து விடவோ, திசை திருப்பி விடவோ நிச்சயமாக முடியாது என்று கூறியுள்ள அவர்,

“அதிகாரம் மற்றும் அராஜகத்தின் துணையோடு நடத்தப்படும் இதுபோன்ற நள்ளிரவு கைது நாடகங்களைப் பார்த்தெல்லாம் திராவிட முன்னேற்றக் கழகம், மிரளாது; நடுங்காது. தமிழக மக்களும் அஞ்சமாட்டார்கள்.இந்த மாபெரும் மக்கள் இயக்கம்; பனங்காட்டு நரி. எடப்பாடி போன்ற டெல்லி எடுபிடிகளின் சலசலப்புகளுக்கோ, பொய் வழக்குகளின் மிரட்டலுக்கோ என்றைக்கும் அஞ்சாது” என்று கூறியுள்ளார்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா தொற்று எனும் கொடும் கொள்ளை நோய் எங்கும் பரவி உயிர்களைச் சூறையாடி வரும் வேளையில், குற்றமற்ற ஆர்.எஸ்.பாரதியைச் சிறையில் அடைக்க முயல்வதன் மூலம், நடைபெறுகிற அரசு கொலைவெறி பிடித்த இதயமற்ற ஈனத்தனமான அரசு என்பது நிரூபிக்கப்பட்டுவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பாசிச வெறிகொண்ட அதிமுக அரசு, இதுபோன்ற எதேச்சாதிகார நடவடிக்கைகள் மூலம் எதிர்க்கட்சிகளின் குரல்வளையை நெரிக்கலாம் என்று மனப்பால் குடிக்கிறது. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன என்பதை உணராமல், எடப்பாடி அரசு காட்டு தர்பார் நடத்துகிறது. நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி மீது புனையப்பட்டுள்ள பொய்வழக்கைத் திரும்பப் பெற்று, உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்” எனவும் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில், “பிப்ரவரி மாதம் ஒரு நிகழ்ச்சியில் தான் பேசியதற்கு ஆர்.எஸ்.பாரதி வருத்தம் தெரிவித்துவிட்டார். ஆனால், யாரோ ஒருவர் வழக்கு கொடுக்க காத்திருந்து அதிகாலை கைது செய்திருப்பது பழிவாங்கும் நடவடிக்கை. ஹெச்.ராஜா உள்ளிட்டோர் மீது ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அந்த புகார்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இது எதிர்க்கட்சிகளை மிரட்டுவது போலதான் உள்ளது” என்று விமர்சித்துள்ளார்.

எழில்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon