மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

ஆர்.எஸ்.பாரதி அதிகாலையில் கைது!

ஆர்.எஸ்.பாரதி அதிகாலையில் கைது!

திமுக அமைப்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி இன்று அதிகாலை கைது செய்யப்பட்டார்.

சென்னை அன்பகத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி நடந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இந்தியாவிலேயே தமிழகம் தலைநிமிர்ந்து நிற்பதற்கு காரணம் திராவிட இயக்கம்தான். ஒரு தாழ்த்தப்பட்டோர் கூட மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிடையாது. தமிழ்நாட்டில் கலைஞர் ஆட்சிக்கு வந்த பிறகு வரதராஜனை உட்கார வைத்தார். ஏழெட்டு தாழ்த்தப்பட்டவர்கள் வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகளாக இருந்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை” என்று பேசியிருந்தார். தான் எந்த உள்நோக்கத்துடனும் பேசவில்லை என அதற்கு வருத்தமும் தெரிவித்துவிட்டார்.

ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆதித்தமிழர் மக்கள் கட்சியின் தலைவர் கல்யாண சுந்தரம் புகார் அளித்தார். ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு அடங்கிய வீடியோவையும் அவர் சமர்ப்பித்திருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.பாரதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்பட 2 பிரிவுகளின் கீழ் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த நிலையில் இன்று (மே 23) அதிகாலை 5.30 மணியளவில் ஆலந்தூரிலுள்ள ஆர்.எஸ்.பாரதி வீட்டிற்குச் சென்ற மத்திய குற்றப் பிரிவு உதவி ஆணையர் தலைமையிலான காவல் துறையினர் அவரை கைது செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, “பிப்ரவரி 15ஆம் தேதி சென்னையில் நான் பேசியது சமூக ஊடகங்களில் திரிக்கப்பட்டு வெளியானது. கொரோனா சூழலில் தனிமைப்படுத்திக் கொண்டிருந்த நிலையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. . யாரையோ திருப்திப்படுத்த என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

மேலும், “கொரோனா தடுப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு என கூறியதாலும், ஓ.பன்னீர்செல்வம் மீது ஊழல் புகார் அளித்ததாலும் என்னை கைது செய்துள்ளனர் சீப்பை மறைத்து வைத்து விட்டால் கல்யாணம் நிற்காது. கொரோனா விவகார ஊழல் பற்றி புகாரளிக்கப்படும்” என்றும் தெரிவித்துள்ளார்.

ஆர்.எஸ்.பாரதியை மருத்துவப் பரிசோதனைக்காக காவல் துறையினர் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். கைது நடவடிக்கை குறித்த தகவல் அறிந்ததும், அவரை ஜாமீனில் எடுக்கும் நடவடிக்கைகளை திமுகவின் வழக்கறிஞர் பிரிவினர் தொடங்கிவிட்டனர்.

எழில்

சனி, 23 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon