வி.பி.துரைசாமி விலகல்: கொங்கு திமுகவில் என்ன தாக்கம்?

politics

திமுகவின் தலைமைக் கழக பதவிகளுக்கு அடுத்துள்ள முக்கியமான நியமனப் பதவி துணைப் பொதுச் செயலாளர் பதவி. இப்படிப்பட்ட முக்கியமான பதவி வகித்து வந்த வி.பி.துரைசாமி எதிர்பார்த்தபடியே இன்று (மே 22) சென்னை பாஜக அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அக்கட்சியில் இணைந்தார்.

திமுகவை கடுமையாக விமரிசித்திருக்கும் வி.பி. துரைசாமியின் விலகல், திமுகவில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நாமக்கல் அரசியல் ஆர்வலர்களிடம் விசாரித்தோம்.

“முதலில் வி.பி.துரைசாமி நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவரே கிடையாது. அவர் திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர். இங்கே அரசியலில் ஈடுபட்டதால் அவருக்கு நாமக்கல் மாவட்டம் அரசியல் முகவரியைக் கொடுத்தது. இப்போது அமமுக மாநிலத் துணைத் தலைவராக இருக்கும் அன்பழகன், நாமக்கல் அதிமுக மாசெவாக இருந்தபோது… வி.பி. துரைசாமி தீவிர அரசியலில் ஈடுபட்டார். இருவரும் அப்போது நல்ல மாஸ் காட்டிக் கொண்டிருந்தனர். வி.பி. துரைசாமி பொதுவாகவே மேம்போக்கு அரசியல் செய்பவர். அதனால் துணை சபாநாயகராக இருந்தபோது அவருடன் இருந்த மாஸ், அதற்குப் பின் மெல்ல மெல்ல அவருக்குக் குறைய ஆரம்பித்துள்ளது.

இதனால் கிரவுண்ட் லெவலில் அவரது விலகல் ஏற்படுத்தும் தாக்கத்தை விட கொங்கு மண்டலத்தில் திமுகவுக்கு இமேஜ் ரீதியில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. அருந்ததியர்களுக்கான உள் ஒதுக்கீட்டுக்குப் பிறகு கொங்கு மண்டலத்தில் திமுக அருந்ததியர்களின் வாக்குகளைப் பெறுவதில் முன்னேற்றம் காட்டி வந்தது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஆதித் தமிழர் முன்னணி, கொமதேக ஆகிய இரு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து திமுக நடத்திய மாநாடு ஒரு மைல் கல்லாக இருந்தது.

ஆனால், இப்போது விபி துரைசாமியின் விலகலையடுத்து அவர் கொங்கு மண்டலம் முழுதும் திமுக தன்னை அருந்ததியர் என்பதால் எப்படியெல்லாம் நடத்தியது என்று தாக்குதல் தொடுக்கத் திட்டமிட்டுள்ளார். இதன் மூலம் கொங்கு மண்டலத்தில் திமுகவின் அருந்தியர் வாக்கு வங்கியில் விபி துரைசாமி ஒரு கீறலை ஏற்படுத்த முடியும். அது சேதமாகுமா என்பது திமுக எதிர்கொள்ளும் விதத்தில்தான் இருக்கிறது” என்கிறார்கள்.

நாமக்கல் திமுகவின் சீனியர்கள் சிலரிடம் பேசினோம்.

“எங்களிடம் அன்பாகப் பேசுவார். ஆனால் இப்போது திமுக தன் இலட்சியத்தில் இருந்து விலகிவிட்டது என்கிறார். வி.பி. துரைசாமிக்கு பதவி கொடுத்துக் கொண்டிருப்பதுதான் திமுகவின் இலட்சியம் என்றால், அதில் இருந்து திமுக விலகிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவருடன் சில முன்னாள் ஒன்றிய செயலாளர்கள், பேரூர் கழக முன்னாள் செயலாளர்கள் இருப்பதாக அறிகிறோம். அவருடைய நண்பர்களாக இருந்தாலும் யாரும் அவருடைய ஃபாலோயர்களாக இருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர் சென்ற இடம் பாஜக” என்கிறார்கள்.

ராசிபுரத்தை உள்ளடக்கிய நாமக்கல் கிழக்கு திமுக மாவட்டப் பொறுப்பாளர் ராஜேஸ்குமாரிடம் மின்னம்பலம் சார்பாகப் பேசினோம். “இந்த விவகாரத்தில் நான் கருத்து சொல்வது முறையல்ல” என்று ஒதுங்கிக் கொண்டார்.

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *