மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 26 பிப் 2021

ஜூன், ஜூலையில் சசிகலா விடுதலை!

ஜூன், ஜூலையில் சசிகலா விடுதலை!

மின்னம்பலம்

போயஸ் கார்டன் இல்லத்தை ஜெ.வின் நினைவு இல்லமாக்க இன்று (மே 22) தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்திருக்கும் நிலையில், பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலா விரைவில் விடுதலை ஆக இருப்பதால்... விடுதலைக்குப் பின் அவர் போயஸ் கார்டன் இல்லத்துக்கு வரக் கூடாது என்பதாலும் அதை பயன்படுத்தக் கூடாது என்பதற்காகவும் அவசர அவசரமாக இந்த அவசர சட்டத்தை பிறப்பித்திருக்கிறார்கள் என்று தகவல்கள் பேசப்பட்டு வருகின்றன.

சசிகலா விரைவில் விடுதலையாகிறார் என்ற தகவல்கள் சில மாதங்களாகவே வந்துகொண்டிருக்க, அமமுக பொதுச் செயலாளர் தினகரனும் அவ்வப்போது ஊடகங்களில், “சட்ட ரீதியான முயற்சியில் இருக்கிறோம். விரைவில் சொல்கிறோம்’ என்று பதில் சொல்லி வந்தார். இந்த நிலையில் சசிகலா எப்போதுதான் விடுதலையாவார் என்று அவரது வழக்கறிஞரான ராஜா செந்தூர் பாண்டியனிடம் மின்னம்பலம் சார்பில் கேட்டோம்.

“ நான் திருமதி சசிகலா அவர்களை மார்ச் மாதம் முதல்வாரம் சிறைக்கு சென்று பார்த்தேன். அதன் பின்னர் கொரோனா ஊரடங்கின் காரணமாக அவரை நான் மட்டுமல்ல யாரும் சந்திக்க இயலவில்லை. இந்த நிலையில் போயஸ்கார்டன் அவசர சட்டம் குறித்து சசிகலா அவர்களுக்கு தெரியப்படுத்துவது அவரது வழக்கறிஞராக எனது கடமையாகிறது.

அதேநேரம் சசிகலாவின் விடுதலை குறித்துக் கேட்டீர்கள். இதே வழக்கில் அவர் 1996 ஆம் ஆண்டு சிறையில் இருந்த நாட்கள், 2014 ஆம் ஆண்டு சிறையில் இருந்த நாட்களைக் கணக்கில் கொண்டு, இருமுறை பரோலில் வந்த நாட்களையும் கணக்கில் கொண்டு...முதல் கட்டமாக சிறைவாசிக்கு சிறைத்துறை வழங்கும் சலுகைகளைக் கொண்டு பார்த்தால் செப்டம்பர் 2020 இல் அவர் விடுதலையாக வேண்டும். இரண்டாவது கட்டமாக நாங்கள் செய்யும் சட்ட பூர்வமான முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கினால் அவர் இந்த ஜூன், ஜூலையில் விடுதலையாவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன. இதுதான் சட்ட ரீதியான இப்போதைய நிலைமை” என்கிறார் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன்.

-ஆரா

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon