மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, புதன், 3 ஜுன் 2020

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகள்: அஞ்சலியிலும் தொடரும் அடக்குமுறை!

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகள்: அஞ்சலியிலும் தொடரும் அடக்குமுறை!

டி.எஸ்.எஸ். மணி

தூத்துக்குடி மாவட்டத்தில், தூத்துக்குடி நகரம், ஒட்டப்பிடாரம் வட்டம், புதியமுத்தூர் பகுதிகளில், ‘கறாரான 144’ என இன்றைக்கு மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகள் ஒரு நாள் மட்டும் மூடப்பட்டுள்ளன. இரண்டாண்டுக்கு முன்னால் 2018 மே 22 ஆம் தேதி நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் கல்லறைக்கு அஞ்சல் செலுத்தச் செல்பவர்கள் ஆதார் அட்டை எடுத்து செல்ல உத்தரவு பறந்துள்ளது. அரசுக்கு ஏன் இவ்வளவு பதட்டம்?

லட்சக்கணக்கான மக்கள், கட்சி சார்பற்ற முகத்துடன், 2018 மார்ச் 24 ல், அமைதியான, ஸ்டெர்லைட் எதிர்ப்பு கண்டனக் கூட்டத்தை நடத்தினார்களே! அப்போது, ஆலை நிர்வாகத்திற்குப் பின்னால், ஒரு பெரும் சக்தி திட்டமிடத் தொடங்கியதே! 22-05-2018 தூத்துக்குடி கலெக்டர் அலுவலகம் முன்னால், அமைதியாக, அணி திரண்டிருந்த, கைக்குழந்தைகளுடன் வந்திருந்த தாய்மார்கள் உட்பட, அறவழி மட்டுமே தங்களது ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு என்று திட்டமிட்டிருந்த, தூத்துக்குடி மாவட்டத்தின், பல்லாயிரக்கணக்கான, அப்பாவி மக்கள் மீது, எதிர்பாராத வேளையில், துப்பாக்கித் தோட்டாக்கள் சீறிப் பாய்ந்தன.

‘முழக்கமிட்ட சிறுமியை வாயிலே சுடு...’ ’முன்னோடியாய் வந்த அமைப்புப் பொறுப்பாளர்களை, குறிபார்த்து சுடு’ என்று அந்த தோட்டாக்களுக்கு சொல்லிக் கொடுத்தது யார்? எல்லாமே அந்த, தாமிர உருக்காலையைப் பாதுகாக்க! ஏன் அந்த உருக்காலையைப் பாதுகாக்க வேண்டும்? அது இந்திய கார்ப்பரேட் வேதாந்தா நிறுவன முதலாளி அனில் அகர்வாலுக்கு சொந்தம். ஏன் அனில் அகர்வாலின் சொத்தைப் பாதுகாக்க வேண்டும்? அவர் ஒடிசாவில், அலுமினியச் சுரங்கம், அலுமினிய ஆலை வைத்திருப்பதாலா? அதற்காக, நியாம்கிரி மலை ஆதிவாசிகளது நிலத்தை அபகரித்ததாலா? வன இலாகா நிலங்களை ஆக்கிரமித்தார் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுத்ததாலா! இல்லவே இல்லை.

பிறகு எதற்காக? 2004 ம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா அந்த ஆலைக்கு அடிக்கல் நட்டதாலா? அல்லது 2006 இல் முதல்வர் மு.கருணாநிதி , அந்த ஆலையைச் செயல்படுத்த அனுமதி கொடுத்ததாலா? அவை இப்போது காரணமாக இருக்க முடியாதே! ஓஹோ, அந்த வேதாந்தா குழுமத்தின் தலைமையகம் லண்டனில் இருப்பதாலா? இங்கிலாந்தை ஆளும் பழமைவாத கட்சி ( Conservative Party) அனில் அகர்வாலுக்கு ஆதரவாக இருப்பதாலா? அதேநேரம், லண்டன் பங்குச் சந்தையிலிருந்து வேதாந்தா நிறுவனத்தை, வெளியேற்றி விட்டார்களே! அதற்கான காரணங்களில் ஒன்றாக, ஸ்டெர்லைட் ஆலை 24 ஆண்டுகளாக, தூத்துக்குடியின், சுற்றுச் சூழலைக் கெடுத்து, நிலம், நீர், காற்று ஆகியவற்றை மாசு படுத்தியதாக லண்டனில் அம்பலப்படுத்தப்பட்டதே! அதை செய்தது, இங்கிலாந்து நாட்டு எதிர்க் கட்சியான, தொழிலாளர் கட்சி தானே! ஆளும் கட்சியும், பிரதமரும், வேதாந்தாவிற்கு ஆதரவுதானே!

ஓஹோ, அதனால்தான், மே 22 துப்பாக்கிச் சூட்டிற்கு, ஒரு வாரம் முன்பு, இந்தியாவில் இருந்த அன்றைய இங்கிலாந்து நாட்டின் துணைத் தூதர் பரத் ஜோஷி கூறிய அறிவிப்பா? அப்படி என்ன அவர் அறிவித்தார்? ஸ்டெர்லைட் நிர்வாகம், தமிழ்நாட்டில் 700 மில்லியன் டாலர் முதலீடு செய்யப் போகிறது என்று அறிவித்தாரே! அவருக்கென்ன ஒரு தனியார் நிறுவனம் பற்றி அவ்வளவு அக்கறை? அதாவது, துணைத்தூதர் மூலம் இங்கிலாந்து அரசு அந்த வக்காலத்து வேலை யைச் செய்ததா! அதுதான் இங்குள்ள நிர்வாகத்தை, காவல் துறையை, அதிகாரிகளை, கை கட்ட வைத்து, உலகமே அதிர்ச்சியடையும் அளவுக்கு அறவழி போராளிகள் மீது, ஈவிரக்கமற்று,, குறி பார்த்து, குருவிகளைச் சுடுவது் போல சுட்டு, 13 பேர் ரத்தத்தைக் குடிக்க வைத்ததோ!

அதுதான், மறுநாள், மே 23 ம்நாள், திரேஸ்புரம் அருகே சாலையோரம் சென்று கொண்டிருந்த மீனவப் பெண் ஜான்சியையும், அண்ணா நகரில் ஒருவரையும் சுட்டுக் கொல்ல வைத்ததோ! அந்த அளவுக்கு, இங்கிலாந்து அரசாங்கம் ஈடுபட்டதென்றால், அவர்களது உளவுத்துறையின் திட்டம் கண்டிப்பாக அதில் இருக்கத்தானே செய்யும்?

அதனால்தான் முன்னோடிகளாக காட்டிக் கொண்டவர்களை குறி வைத்தார்களோ! அதனால்தான் அதிக அளவில் புரட்சி பேசியவர்களை பலியிடுவது என்ற சர்வதேச அணுகுமுறை எடுத்தார்களோ! அதனால்தான், மே 20 ம் நாளே, மக்களின் போராட்ட ஒருங்கிணைப்பை உடைக்க, ஒரு சிலரை, கலெக்டர் அலுவலகம் அழைத்து, கையெழுத்து போட வைத்து, களத்தை மாற்றிக் குழப்ப திட்டமிட்டார்களோ? அப்படித் திட்டமிட்டதால்தான், தைரியமாக, கலெக்டர் அலுவலகம் வந்தவர்களை, சுட்டுக்கொல்ல துணிச்சல் கொண்டனரோ! இத்தனைக்கும் பின்னாலே பிரிட்டிஷ் இன்டெலிஜன்ஸ் இருந்ததால்தான், இங்குள்ள காவல்துறைக்கே, யார் சுட்டது என்ற கேள்விக்கு விடை உடனடியாகத் தெரியவில்லையோ?

அவர்களென்ன சாதாரணமானவர்களா? ஈராக்கில், இல்லாத, அபாயகரமான படுகொலை ஆயுதங்களை ( Weapons of Mass Destruction), இருப்பதாக கூறி விட்டு, அமெரிக்கா, சதாம் ஹுசைனைக் கொலை செய்த பிறகு, ‘ஆபத்தான ஆயுதம் பற்றிய தங்கள் செய்தி தவறு’ என்று கூறியவர்கள்தானே!

200 ஆண்டுகள் இந்தியாவை ஆண்டோமே என்ற ஆதிக்க உணர்வு இருக்கத்தானே செய்யும்? அதனால்தான், துப்பாக்கி சூட்டிற்கு இரண்டு நாள் முன்பே, கையெழுத்துப் போட்டவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள்,ஆலையே வேண்டாம் என்ற லட்சக்கணக்கான மக்களது எதிர்ப்புக்கு இடையே, ஆலையின் சிம்னி உயரத்தைக் கூட்டினால் போதும் என்றார்களோ! அதனால்தான், பழைய அனுபவப்படி, அரசியல் கட்சிகளை, போராட்டக் களத்திற்குள் இறக்கி விட்டு விட்டால், எப்படியும் முன்பு போலவே, போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்வர் என்று குறுக்கு வழி ஆலோசனைகளை கூறச் சொன்னார்களோ! குறுக்கு ஆலோசனை கூறியவர்களுக்கு, விருதுகளும், தொகைகளும் வந்தடைந்தனவோ! இத்தனையும் சர்வதேச வழிகாட்டலா?".

ஆனால், இப்போது, தமிழ்நாடு அரசுதான், ஸ்டெர்லைட்டை எதிர்த்து வழக்காடுகிறது. ஆலையை இழுத்து பூட்டியது. ஆலைக்குக் கொடுத்த நிலத்தை மீட்போம் என்றது. சூழலியல் கெட்டுள்ளது என்றது. பலியானவர்களுக்கு, நிதி வழங்கியது. பலியானோர் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கியது. அரசின் திட்டமான, ஸ்டெர்லைட் ஆலை மூடலை செயல்படுத்த உயிர் கொடுத்த, 15 பேரும், அரசு பார்வையில், தியாகிகள் தானே! அந்தத் தியாகிகளுக்கு, நினைவு மண்டபம் கட்ட அரசே அனுமதி தரலாமே! அவர்களது தியாகத்திற்கு அஞ்சலி செலுத்தும் மக்களுக்கு நினைவு நாளன்றாவது ஆதரவு தரலாமே! உயிர்ச்சூழல் தினம் என இந்த நாளை அறிவிக்கலாமே! ஏன் இந்த தடபுடல் செய்து, மக்களை அடக்க முயல்கிறார்கள்?

“காட்டை அழிப்பது கூடும். அலை கடலையும் தூர்ப்பது கூடும். 

மேட்டை அகழ்வது கூடும்.-விரி

விண்ணையுயம் அளத்தல் கூடும். 

ஏட்டையும், நூலையும் தடுத்தல் கூடும்- உரிமை ...” என்ற பாவேந்தர் பாரதிதாசன் வரிகள்தான் நினைவுக்கு வருகிறது.

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon