மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

திமுகவில் சாதிக்கொரு நீதி: பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி

திமுகவில் சாதிக்கொரு நீதி: பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமிவெற்றிநடை போடும் தமிழகம்

திமுகவில் சாதி பார்ப்பதாக பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலாளராக இருந்த வி.பி.துரைசாமி, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகனை சந்தித்தது சர்ச்சையானது. இதனையடுத்து, ஸ்டாலினைச் சுற்றியுள்ளவர்கள் அவரிடம் தன்னைப் பற்றி தவறான தகவல்களை அளிப்பதாக தெரிவித்த வி.பி.துரைசாமி, திமுகவில் தன் மீது நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்லை என்று குறிப்பிட்டார்.

இவ்வாறு நேற்று பேட்டியளித்த சில மணி நேரத்தில் துணைப் பொதுச் செயலாளர் பதவி துரைசாமியிடமிருந்து பறிக்கப்பட்டு, அந்தியூர் செல்வராஜுக்கு வழங்கப்பட்டது.

இந்த நிலையில் கமலாலயத்துக்கு இன்று (மே 22) சென்ற வி.பி.துரைசாமி, பாஜக மாநிலத் தலைவர் முருகனை சந்தித்து தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார். அப்போது, பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உடனிருந்தார்.

அப்போது பேசிய அவர், “வேற்று இயக்கத்தில் இருந்தாலும் நானும் முருகனும் வைணவ குலத்தைச் சேர்ந்தவர்கள். புரட்டாசி மாதம் விரதம் இருக்கும் கலாச்சாரத்தில் வளர்ந்தவர்கள். நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் யாருடைய மனதையும் புண்படுத்தும்படி நான் பேசியதில்லை. வளர்ந்த நாடான அமெரிக்காவில் அதிபர் கூட, இந்திய பிரதமர் மோடியின் ஆதரவு இல்லாமல் தன்னால் வெற்றிபெற முடியாது என்று நினைக்கிறார். அந்த அளவு இந்தியாவின் பெருமையை உலகுக்கு நிலைநாட்டி இருக்கிறார். என்னைப் போன்றவர்கள் அவருடன்தானே இருக்க வேண்டும். ” என்று குறிப்பிட்டார்.

மேலும், “இந்த நாட்டில் சாதி என்பது இருக்கத்தான் செய்யும். திமுகவில் அவரவர் அவரவர் சாதியினரை சந்திக்கலாம். ஆனால், நானும் முருகனும் சந்திக்கக் கூடாது என்கிறார்கள் . சாதி, சமயம் இல்லை, இந்த நாடு இந்தியர்களுக்குத்தான் என்று சொல்லும் பாஜகவை நாம் வலுப்படுத்த வேண்டும். அரசியல் பிழைப்பு நடத்தியவர்களை நம்பி 50 ஆண்டுகாலம் ஏமாந்துவிட்டேன் என்பதுதான் என்னுடைய வருத்தம். என்னுடைய உழைப்பைத் திருவிட்டார்கள், அதற்கு ஊதியமில்லை. இங்கு ஊதியத்திற்காக வரவில்லை. உழைப்பை அங்கீகரிப்பதால் வந்திருக்கிறேன்” என்றும் கூறினார்.

முன்னதாக தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த துரைசாமி, “பாஜகவின் கொள்கைகளை ஏற்றே அக்கட்சியில் இணைகிறேன். அப்படி ஏற்றுக்கொண்டால்தான் இந்தியாவைக் காப்பாற்ற முடியும்” என்று தெரிவித்தார்.

திமுக உங்களை பதவியிலிருந்து நீக்கியுள்ளதே என்ற கேள்விக்கு, “அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக்கொள்கிறேன் என நானே திமுக தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அதுதான் மரியாதை” என்று குறிப்பிட்டார்.

திராவிட இயக்க சிந்தனையாளரான நீங்கள் முற்றிலும் மாற்று சிந்தனையுள்ள முகாமுக்கு செல்கிறீர்களே என்ற கேள்விக்கு, “திமுகவில் இருப்பவர்கள் இயக்கம் தோற்றுவிக்கப்பட்ட நோக்கத்திலிருந்து விலகிச் செல்லும்போது நான் சென்றால் என்ன தவறு” என்று பதிலளித்தார்.

உங்களிடம் விளக்கம் கேட்கப்படாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு, “இதுதொடர்பாக நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. அது அவர்களின் கட்சி. ஸ்டாலினுக்கு எல்லா அதிகாரங்களும் இருக்கிறது. கலைஞர், பேராசிரியர் இருக்கும்போதே அதிகாரங்களை எடுத்துக்கொண்டார். இனி என்னுடைய பாதை வேறு. அதில் பயணித்து நல்ல இடத்துக்குச் செல்ல வேண்டும் என்பதே எனது எண்ணம். திமுகவில் நன்றாகவே சாதி பார்க்கிறார்கள். அங்கு சாதிக்கொரு நீதி” என்று கூறினார்.

எழில்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon