மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, ஞாயிறு, 24 ஜன 2021

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசரச் சட்டம்!

ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க அவசரச் சட்டம்!வெற்றிநடை போடும் தமிழகம்

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வசித்து வந்த போயஸ் கார்டன், வேதா இல்லம் நினைவிடமாக்கப்படும் என்று தமிழக அரசின் சார்பில் 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். வேதா இல்லத்தை நினைவிடமாக்கும் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வந்தன.

இதுதொடர்பாக தமிழக அரசு கடந்த 6ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், “ஜெயலலிதா நினைவு இல்லத்திற்கான நில எடுப்பினால் பாதிப்புக்கு உள்ளாகும் குடும்பங்கள் எதுவும் இல்லை. எனவே, அவர்களை அப்புறப்படுத்தவோ, மறு குடியமர்த்துவதோ, மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவோ எந்த அவசியமும் ஏற்படவில்லை” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்க தமிழக அரசு இன்று அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவில், “ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்குவதற்கான நிர்வாக ரீதியான ஒப்புதல் 2017ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. தற்போது வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு அவசரச் சட்டத்தை பிறப்பித்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உத்தரவிட்டுள்ளார். இந்த சட்டத்தின்படி, வீட்டில் உள்ள அசையும் பொருட்கள் அனைத்தும் அறக்கட்டளைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. வீட்டில் உள்ள பொருட்கள், ஜெயலலிதா பயன்படுத்திய புத்தகங்கள், நகைகள் என அனைத்தும் நினைவிடத்தில் வைக்கப்படும்.

இதனை நிர்வகிப்பதற்காக புரட்சித் தலைவி ஜெ.ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் அரசு அதிகாரிகள் உறுப்பினர்களாக இருப்பர். செய்தி மற்றும் விளம்பரத் தொடர்புத் துறையின் இயக்குனர் உறுப்பினர்-செயலராக இருப்பார்.இந்த அறக்கட்டளை, வேதா நிலையத்தை நிர்வகிப்பதுடன், அதனை பராமரிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யவும் தேவையான நடவடிக்கையை எடுக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழில்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon