மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, புதன், 3 ஜுன் 2020

செலவைக் குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

செலவைக் குறைக்க தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

பொருளாதார நெருக்கடியைச் சரிசெய்ய சிக்கன நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த 58 நாட்களாக தமிழகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், கடும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. அரசின் வருவாய் குறைந்ததால் டாஸ்மாக்கைத் திறக்கும் முடிவை எடுத்தது. ஊரடங்குக்குப் பிறகான தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஆய்வு நடத்துவதற்காக முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும், முன்னாள் பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுத் தலைவருமான சி.ரங்கராஜன் தலைமையில் குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நடப்பு நிதியாண்டின் மொத்த செலவினத்தில் 20% செலவுகளைக் குறைக்க தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் நேற்று பிறப்பித்துள்ள அரசாணையில், கொரோனா காரணமாக ஏற்பட்ட எதிர்பாராத செலவினங்களால், தமிழக அரசின் 2020-21ஆம் ஆண்டு செலவின மதிப்பீட்டில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அரசு செலவிலான மதிய விருந்து, இரவு விருந்து நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது. அரசு அலுவலகங்களின் செலவினங்கள் குறைக்கப்படுகிறது. மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அலுவலகத் தேவைகளுக்கான பொருட்களை வாங்குவது 50 சதவிகிதம் குறைக்கப்பட வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் சால்வைகள், பூங்கொத்துகள், நினைவுப் பரிசுகள் வழங்குவது உள்ளிட்டவை தவிர்க்கப்பட வேண்டும் எனவும், “அதிகாரிகள் அரசு செலவில் வெளிநாடுகளுக்குச் செல்ல கூடாது. அரசு உயரதிகாரிகள் உயர் வகுப்பு விமானங்களில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. மாநிலத்துக்கு வெளியே பிற மாநிலங்களுக்கு விமானம் மூலம் பயணிக்கும்போது ரயில் கட்டணத்துக்கு இணையான தொகைக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். விளம்பரச் செலவுகளை 25 சதவிகிதம் குறைத்துக் கொள்ள வேண்டும்” என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து அரசு அலுவலகங்களிலும் புதிய பணியிடங்களை ஏற்படுத்த தடை விதிக்கப்படுவதாகவும், ஏற்கனவே காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பத் தடையில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எழில்

வெள்ளி, 22 மே 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon