மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 21 மே 2020

கைவிட்ட கூட்டணிக் கட்சிகள்: கமலாலயத்தில் விவாதம்!

கைவிட்ட கூட்டணிக் கட்சிகள்: கமலாலயத்தில் விவாதம்!

டிவி விவாதம் ஒன்றில் காங்கிரஸ் எம்பி ஜோதிமணியும், பாஜகவின் கரு. நாகராஜனும் சரமாரியாக வார்த்தைகளால் மோதிக் கொண்டனர். ஜோதிமணி மீது தனிப்பட்ட முறையில் கரு. நாகராஜன் தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி அவருக்கு பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

அத்தோடு நில்லாமல்... தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, மறுமலர்ச்சி தி.மு.க., இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, திராவிடர் கழகம், திராவிட இயக்க தமிழர் பேரவை ஆகிய கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில்,

“ நியூஸ் 7 தமிழ் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்ற மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் செல்வி எஸ்.ஜோதிமணியை இழிவுபடுத்துகிற வகையில் பா.ஜ.க.வை சேர்ந்த கரு.நாகராஜன் பேசியதை அநாகரீகத்தின் உச்சகட்டமாக கருதி மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம். நீண்டகாலமாக தொலைக்காட்சி விவாதங்களில் பா.ஜ.க.வினர் மிக மிக கேவலமான முறையில் விவாதத்தில் பங்கேற்று வருவதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது.

இத்தகைய போக்கின் தொடர்ச்சியாக தனிப்பட்ட முறையில் செல்வி ஜோதிமணியை தரக்குறைவாக கரு.நாகராஜன் பேசுவதற்கு நெறியாளர் அனுமதித்தது மிகுந்த வேதனைக்குரியது. அந்த விவாதத்தை பார்த்தவர்கள் அனைவருமே பெரும்பாலான நேரம் கரு.நாகராஜனுக்கு ஏன் வழங்கப்பட்டது என்கிற எண்ணம் தான் மேலோங்கி நிற்கிறது. வரம்புமீறி நாகரிகமற்ற முறையில் பேசிய கரு.நாகராஜனை தடுத்து நிறுத்த வேண்டிய கடமையில் இருந்து நெறியாளர் முற்றிலும் தவறிவிட்டார் என்பதை குற்றச்சாட்டாக கூற விரும்புகிறோம்.

தொலைக்காட்சி விவாதத்தில் மக்களவை உறுப்பினர் என்றோ, பெண் என்றோ பாராமல் செல்வி எஸ்.ஜோதிமணி அவர்களை தரம்தாழ்ந்து பேசிய கரு.நாகராஜனை கண்டிக்கிற வகையில் நியூஸ் 7 தொலைக்காட்சி செயல்படாததை வன்மையாக கண்டிக்கிறோம். எனவே பா.ஜ.க.வினர் பங்கேற்கும் நியூஸ் 7 தொலைக்காட்சி விவாதங்களில் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்கள் எவரும் பங்கேற்க மாட்டார்கள் எனபதை தெரிவித்துக்கொள்கிறோம்” என்று மே 19 ஆம் தேதியன்றே அறிவித்தனர்.

இதுகுறித்து பாஜகவின் நிர்வாகிகள் சிலர் கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் முருகனிடம் சில விஷயங்களை சொல்லியிருக்கிறார்கள்.

“காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை அவதூறாக பேசியதாக கரு. நாகராஜனைக் கண்டித்து திமுகவின் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன. பாஜகவையும் கண்டித்து சம்பந்தப்பட்ட ஊடகத்தின் மேலும் குற்றம் சாட்டுகின்றன. ஆனால், நாகராஜன் பேசுவதற்கு முன்பே ஜோதிமணி, ‘மக்கள் பிரதமரை கல்லால் அடித்திருப்பார்கள்’ என்று கூறியிருக்கிறார். அதையடுத்துதான் நாகராஜன் அவ்வாறு பேசுவதற்குத் தூண்டப்பட்டார். பிரதமர் மோடியை மக்கள் கல்லால் அடிக்கும் நிலை உருவாகியிருக்கும் என்று ஜோதிமணி கூறியதை தமிழகத்தில் பாஜகவினர் மட்டுமே கண்டித்தோம். நம்மோடு கூட்டணியில் இருக்கிற அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட யாருமே திமுக கூட்டணி அளவுக்கு பொங்கியெழ வில்லை. அப்படியானால் தமிழகத்தில் பாஜக தலைமையிலான கூட்டணி இருக்கிறதா இல்லையா? அதிமுகவுக்காக நாம் பல முறை களமிறங்கியுள்ளோம். ஆனால் பிரதமரை கல்லால் அடிப்பது என்ற வார்த்தையைப் பயன்படுத்திய ஜோதிமணி மீது ஏன் கூட்டணியினர் யாரும் கண்டனம் தெரிவிக்கவில்லை?” என்று கேட்டிருக்கிறார்கள்.

தமிழக பாஜக தலைவர் முருகனும், இது யோசிக்க வேண்டிய விஷயம்தான் என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள் நம்மிடம் பேசிய பாஜக நிர்வாகிகள்.

மே 7லிருந்து அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்?: முன்னாள் அமைச்சர் ...

6 நிமிட வாசிப்பு

மே 7லிருந்து அமைச்சர் என்ன செய்து கொண்டிருந்தார்?: முன்னாள் அமைச்சர் கேள்வி!

பேருந்து சேவை, சின்னதிரை படப்பிடிப்பு - ஊரடங்கு தளர்வுகள் : முழு ...

20 நிமிட வாசிப்பு

பேருந்து சேவை, சின்னதிரை படப்பிடிப்பு - ஊரடங்கு தளர்வுகள்  : முழு விவரம்!

சசிகலாவின் முதல் கூட்டம் எடப்பாடியில்! அவசரத் தீர்மானங்களின் ...

15 நிமிட வாசிப்பு

சசிகலாவின்  முதல் கூட்டம் எடப்பாடியில்!   அவசரத் தீர்மானங்களின் பின்னணி!

வியாழன் 21 மே 2020