மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, செவ்வாய், 11 ஆக 2020

துரை வைகோ ஆன துரை வையாபுரி: பின்னணி என்ன?

துரை வைகோ ஆன துரை வையாபுரி:  பின்னணி என்ன?

மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி ஏப்ரல் 2ஆம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு மதிமுக மாவட்டச் செயலாளர்கள் உட்பட பல்வேறு நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதுபற்றி மின்னம்பலத்தில் சட்டமன்றத்தை நோக்கி வைகோ மகன் என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

நமது செய்தியில் துரை வையாபுரி என்று குறிப்பிட்டிருந்ததை சுட்டிக்காட்டிய மதிமுக நிர்வாகிகள் சிலர், "நீங்கள் உற்றுக் கவனித்தீர்களானால் நாங்கள் துரை வையாபுரி என்று அவரை அழைப்பதில்லை. துரை வைகோ என்றே அழைத்து வருகிறோம். குறிப்பாக அவரது பிறந்த நாளில் வாழ்த்து தெரிவித்த பெரும்பாலான மதிமுக நிர்வாகிகள் துரை வைகோ என்று குறிப்பிட்டே வாழ்த்துக்களை தெரிவித்தனர். பிறந்தநாள் வாழ்த்து ஹேஷ்டேக்கும் துரை வைகோ என்றே இருந்தது.

இதற்கு ஒரு காரணம் உள்ளது. துரை வையாபுரி என்பதைவிட துரை வைகோ என்று அழைக்கும்போது எங்கள் தலைவர் வைகோவின் மகன் என்ற பிம்பம் அழுத்தமாக நிறுவப்படுகிறது. எனவே அதிகாரபூர்வமாக அவரது பெயர் துரை வையாபுரி என்றிருந்தாலும் அன்பு பூர்வமாக, அரசியல் பூர்வமாக அவர் துரை வைகோ ஆகிவிட்டார்"என்றார்கள்.

நாம் விடாமல்," அப்படி என்றால் திமுகவில் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் என்று அழைக்கப்படுவது போல மதிமுகவில் துரை வைகோ வருவாரா?” என்று கேட்டபோது...

"இதுவும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் தலைவரும் கட்சித் தலைமையும்தான் முடிவு செய்ய வேண்டும். துரை வைகோவும் ஏற்கனவே நிர்வாகிகள் தொண்டர்களிடம் நன்கு பரிச்சயமாகியிருக்கிறார். இப்போது கொரோனா வைரஸ் தாக்கம் பற்றி ஒரு விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருக்கிறார். அத்தோடு இல்லாமல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில் துரை வைகோவை மதிமுகவின் இளைஞரணிக்கு முடிவு செய்தால் அதை முன் மொழிய வழிமொழிய பல மாவட்ட செயலாளர்கள் போட்டி போடுவார்கள்" என்று பதிலளித்தனர்.

-ஆரா

சனி, 4 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon