மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

ஊரடங்கு உதவித்தொகை வழங்குவதில் ஆளுங்கட்சி தலையீடு: தினகரன்

ஊரடங்கு உதவித்தொகை வழங்குவதில் ஆளுங்கட்சி தலையீடு: தினகரன்

ஆளுங்கட்சி தலையீடு இல்லாமல் உதவித் தொகை வழங்க வேண்டுமென தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலானோர் பாதிக்கப்பட்ட நிலையில், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 வழங்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அத்துடன் இலவச அரிசி, சர்க்கரை, பருப்பு, பாமாயில் பொருட்கள் வழங்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

அதன்படி தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் 1,000 மற்றும் இலவச பொருட்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இதில் ஆளுங்கட்சியினர் தலையிடுவதாக அமமுக பொதுச் செயலாளர் தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று (ஏப்ரல் 3) அவர் வெளியிட்ட அறிக்கையில், “ஊரடங்கால் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்காக அரசு சார்பில் வழங்கப்படும் 1,000 உதவித் தொகைக்கான டோக்கன் தஞ்சாவூரில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் வழங்கியபோது அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் சுற்றிவளைத்து பிடித்திருப்பதாக செய்தி வெளியாகி இருக்கிறது. ஆளுங்கட்சியினரின் இந்தச் செயல் பெரும் இழப்புக்கு ஆளாகியிருக்கும் ஏழை, எளிய மக்களுக்கு செய்யும் துரோகமாக அமைந்துவிடும். இதன்மூலம் ஆட்சியாளர்கள் அரசியல் ஆதாயம் தேட முயற்சிப்பது சரியானதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உதவித் தொகை அவரவர் வீடுகளில் நேரடியாக பணமாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்திருப்பது ஆளுங்கட்சியினரின் அத்துமீறலை இன்னும் அதிகப்படுத்திவிடுமோ என்ற சந்தேகத்தை மக்களிடம் ஏற்படுத்தி இருக்கிறது என்று குறிப்பிட்ட தினகரன், “ஆளுங்கட்சியின் தலையீடு இல்லாமல் அரசு ஊழியர்களை வைத்து தகுதியுள்ள ஏழை, எளிய மக்கள் அனைவருக்கும் முறையாக உதவித் தொகை வழங்கிட வேண்டும். அதே நேரத்தில் உதவித் தொகை வழங்கச் செல்வோர் மூலம் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எழில்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon