மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

ஊரடங்கு கடுமையாக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை!

ஊரடங்கு கடுமையாக்கப்படும்: முதல்வர் எச்சரிக்கை!

பொதுமக்கள் ஒத்துழைக்கவில்லை எனில் ஊரடங்கு கடுமையாக்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. 334 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

உத்தர பிரதேசம்,அசாம், ஒரிசா, மேற்குவங்கம், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்தில் பணியாற்றிய தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாத சூழலில், சென்னையிலுள்ள சிறப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் வேளச்சேரியிலுள்ள குருநானக் கல்லூரி உள்ளிட்ட வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள 3 முகாம்களுக்கு இன்று (ஏப்ரல் 3) சென்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அங்கு ஆய்வு மேற்கொண்டார். அவர்களுக்கு உணவு, உடை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர், வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகள் செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

பொதுப் போக்குவரத்து இல்லாததால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளதே என்ற கேள்விக்கு, “அத்தியாவசிய பொருட்கள் கொண்டுசெல்வதில் எந்தத் தடையும் இல்லை. தமிழகத்திற்கு வெளி மாநிலங்களில் இருந்து மளிகைப் பொருட்கள் வர வேண்டியுள்ள நிலையில், அங்கெல்லாம் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அத்தியாவசிய பொருட்களை கொண்டுவரும் லாரிகள் அதிகளவில் இயக்கப்படாததால் சிறு நெருக்கடி ஏற்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை கடைபிடிக்க அரசு எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாக இருக்கிறதா என்று செய்தியாளர் கேள்வி எழுப்ப, “ஊரடங்கு உத்தரவு போட்டதே ஒருவருக்கொருவர் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதற்குத்தான். இது மிகக் கொடிய தொற்று நோய். ஆனால், நோயின் தீவிரத்தைப் புரிந்துகொள்ளாமல், விளையாட்டுத் தனமாக சிலர் பைக், கார் மூலம் வெளியே சென்று பொழுதை கழித்துவருகிறார்கள்.

நோயின் தீவிரம் எப்படி உள்ளது என்பதை மக்கள் உணர வேண்டும். நோய் வந்துவிட்டால் அதனை குணப்படுத்த எந்த மருந்தும் கிடையாது. உலகெங்கிலும் பரவி வரும் இந்த நோயைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் தகுந்த ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். ஆனாலும், சிலர் அதனை பொருட்படுத்தவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், “144 உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள் துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. நாங்களும் பொறுமையாக இருந்தோம். 144 தடை என்பது மக்களை துன்புறுத்துவதற்காகவோ அல்லது அத்தியாவசிய தேவைகளை தடை செய்வதற்காகவோ அல்ல. இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டவர்,

“எவ்வளவு சொன்னாலும் சிலர் கேட்பதில்லை. ஆகவே, இனி சட்டம் தன் கடமையைச் செய்யும். பொதுமக்கள் ஊரடங்குக்கு ஒத்துழைக்கவில்லை எனில் ஊரடங்கை கடுமையாக்குவதைத் தவிர வேறு வழி கிடையாது” என்றும் தெரிவித்தார்.

எழில்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon