மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, வியாழன், 22 அக் 2020

தமிழகத்தில் மதுவிலக்கு: காங்கிரஸ் சொல்லும் யோசனை!

தமிழகத்தில் மதுவிலக்கு: காங்கிரஸ் சொல்லும் யோசனை!

மதுவிலக்கை அமல்படுத்த ஊரடங்கு காலத்தை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஊரடங்கு காரணமாக இந்தியா முழுவதுமுள்ள அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. பல நாட்களாக மதுபானங்கள் கிடைக்காமல் இருந்ததால் மதுவுக்கு அடிமையானவர்களில் சிலர் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். கேரளாவில் மருத்துவர்கள் பரிந்துரைத்தால் குடி நோயாளிகளுக்கு மது வழங்கலாம் என்று அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் அறிவித்தார். எனினும், இதற்கு அம்மாநில உயர் நீதிமன்றம் தடை விதித்தது.

இதனிடையே தமிழகத்தில் தினமும் 2 மணி நேரம் டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் என்ற செய்தி தீயாய் பரவி மதுப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அது வெறும் புரளி என்று அமைச்சர் தங்கமணி மறுத்துவிட்டார். இந்த நிலையில் 21 நாள் ஊரடங்கை பயன்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்ரல் 3) வெளியிட்ட அறிக்கையில், “மதுவிலக்கு தொடர்பாக கொடுத்த வாக்குறுதிகளை அதிமுக அரசு காப்பாற்றவில்லை. அதற்கு மாறாக மது விற்பனையை பெருக்குவதில் தான் கவனம் செலுத்தியது. தமிழகத்தில் மே 2018 இல் 3866 டாஸ்மாக் கடைகள் தான் இருந்தன. அது மே 2019 இல் 5152 டாஸ்மாக் கடைகளாக பெருகியதற்கு எடப்பாடி அரசு தான் காரணம்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.

நீண்டகாலமாக தமிழக மக்களில் ஒருகோடி பேருக்கு மேல் மதுவுக்கு அடிமையாகி இருப்பதாகவும், அவர்களால் மது குடிக்காமல் இருக்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் எனவும், மக்கள் ஊரடங்கு அறிவித்தது முதல் மது குடிக்கு அடிமையானவர்கள் மதுவை தேடி அலைகிறார்கள் என்றும் குறிப்பிட்ட அழகிரி, இதை சாதகமாக பயன்படுத்தி தமிழகத்தில் கள்ளச்சாராயம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மது பாட்டில்கள் பகிரங்கமாக விற்கப்படுகிறது. இதற்கு காவல்துறையினர் துணை போவது மிகுந்த கண்டனத்திற்குரியது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க தவறிவிட்டதாக தமிழக அரசை குற்றம் சாட்டியதோடு, “மக்கள் நலனில் அக்கறை, ஜெயலலிதாவின் நோக்கத்தை நிறைவேற்றுவதில் விருப்பம் இருந்தால் தற்போது டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பதால் மது குடிக்கிற பழக்கம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி குடிக்கு அடிமையானவர்களுக்கு கேரள அரசு தொடங்கியிருப்பதைபோல, தமிழகத்தின் பல பகுதிகளில் மறுவாழ்வு மையங்களை உடனடியாக தமிழக அரசு தொடங்கவேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

மேலும், “அ.தி.மு.க. அரசு உண்மையிலேயே மக்கள் நலன் சார்ந்த அரசாக இருக்குமானால் மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து வருமானத்தை குறைத்துக்கொள்ள முன்வரவேண்டும். இதற்கு மக்கள் ஊரடங்கு காலமான 21 நாட்கள் அரிய வாய்ப்பாகும். இதை அ.தி.மு.க. அரசு சரியாக பயன்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

எழில்

வெள்ளி, 3 ஏப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon