tஊரடங்கு: மக்களிடம் மன்னிப்பு கோரிய பிரதமர்

politics

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியாக “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சி மூலம் பொதுமக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றிவருகிறார். கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மன் கீ பாத் நிகழ்ச்சி மூலம் இன்று (மார்ச் 29) உரையாற்றிய பிரதமரின் பேச்சு முழுக்கவே, கொரோனா வைரஸ் எதிர்ப்பு குறித்துதான் அமைந்திருந்தது.

அரசு எடுத்த கடினமான நடவடிக்கையின் காரணமாக வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்ட மக்களிடம் நான் முதலில் மன்னிப்பு கோருகிறேன் என்று குறிப்பிட்டு உரையை ஆரம்பித்த பிரதமர், “குறிப்பாக ஏழை மக்கள் பாதிக்கப்பட்டாலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த இதைத்தவிர வேறு வழியில்லை. உங்களில் பலர் என் மீது கோபமாக இருப்பீர்கள் என்பதும் எனக்கு நன்றாகவே தெரியும். ஆனால், கொரோனா வைரஸுக்கு எதிராக போரிடுவது கடினமான ஒன்றாகும். அதற்கு இதுபோன்ற கடுமையான முடிவுகள் தேவைப்பட்டன. இதன் மூலமாகவே கொரோனாவுக்கு எதிரான போரில் நாம் வெற்றிபெற முடியும். இந்திய மக்களை நாம் பாதுகாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

வேண்டுமென்றே யாரும் விதிகளை மீற விரும்பவில்லை என்பதை புரிந்துகொள்வதாகக் கூறிய பிரதமர், “ஆனால், வேண்டுமென்றே அவ்வாறு செய்கிற சிலரும் இருக்கிறார்கள். ஊரடங்கை கடைப்பிடிக்காவிட்டால் கொரோனா வைரஸ் என்னும் ஆபத்திலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்வது கடினம் என விதிகளை மீறுபவர்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று குறிப்பிட்டார்.

உலகையே சிறையில் அடைத்துள்ள கொரோனா வைரஸால் முதியோர், இளைஞர்கள், வலிமையானவர்கள் என அனைவரும் பாதிக்கப்படுவதாகவும் இந்த நெருக்கடியை எதிர்த்து மனித குலம் ஒன்றுசேர்ந்து போராட வேண்டும் என்றும் குறிப்பிட்ட பிரதமர், “உங்களையும் உங்கள் குடும்பத்தையும் பாதுகாக்கவே ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் தைரியமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டின் முன்பும் லஷ்மணன் கோட்டை வரைய வேண்டும்.

வீட்டுத் தனிமைப்படுத்துதலுக்கு அறிவுறுத்தப்பட்ட சிலர் தவறாக நடந்துகொள்கிறார் என்று அறிந்தபோது மிகவும் வேதனை அடைந்தேன். நாம் கவனமாகவும், சமூக புரிந்துணர்வோடும் இருக்க வேண்டும். சமூக ரீதியான இடைவெளியை அதிகரித்து, உணர்ச்சியின் தூரத்தை குறைக்க வேண்டும். உணர்ச்சி வசப்பட்டு முடிவுகளை எடுக்காதீர்கள், இல்லையென்றால் கட்டாய தனிமைப்படுத்தப்படும் நிலை ஏற்படலாம். ஆரோக்கியம் என்பது செல்வம். விதிகளை மீறும்போது மக்கள் தங்களது ஆரோக்கியத்தை இழக்கும் ஆபத்து ஏற்படும். எந்த அறிகுறியும் காட்டவில்லை என்றாலும் கூட சிலர் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர். அவர்களின் பொறுப்புணர்வுக்காக நான் பாராட்டுகிறேன். தேசநலனை கருதி வீட்டிலேயே இருங்கள், உங்களுக்கான அடிப்படை தேவைகளை கட்டாயம் பூர்த்தி செய்வோம்” என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

**எழில்**

�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *