மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 25 மா 2020

எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுதலையான உமர் அப்துல்லா

எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுதலையான உமர் அப்துல்லா

காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுதலையானார்.

ஜம்மு காஷ்மீருக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை நீக்கியும், ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்தும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 6ஆம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இதற்கு எழும் எதிர்ப்பை சமாளிக்கும் வகையில் பரூக் அப்துல்லா, மெஹபூபா முப்தி, உமர் அப்துல்லா உள்ளிட்ட ஜம்மு காஷ்மீர் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பொதுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் தடைச் சட்டங்களின் கீழ் வீட்டுக் காவலில் சிறை வைக்கப்பட்டனர்.

அனைவரையும் விடுதலை செய்ய வேண்டுமென காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்திலும், பொதுவெளியிலும் குரல் கொடுத்தன. கடந்த ஜனவரி மாதம் உமர் அப்துல்லாவின் புகைப்படம் வெளியிடப்பட்டது. அதில், ஸ்வெட்டர் அணிந்து மற்றும் தாடியுடன் அடையாளம் தெரியாத அளவு உமர் அப்துல்லா மாறியிருந்தார். இது கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே கடந்த 13ஆம் தேதி பரூக் அப்துல்லா மீதான பொது பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் உமர் அப்துல்லா மீதான பொது பாதுகாப்புச் சட்ட நடவடிக்கையும் நேற்று (மார்ச் 24) ரத்து செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து அவர் சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு விடுவிக்கப்பட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, 370ஆவது பிரிவு குறித்தும் மாநிலத்தில் என்ன தொடர்ந்து நடந்தது என்பது குறித்தும் மற்றொரு நேரத்தில் பேசுவதாகக் கூறினார்.

விடுதலை குறித்து உமர் அப்துல்லா தனது ட்விட்டர் பக்கத்தில், “நான் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு 232 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் ஹரிநிவாஸை விட்டு வெளியேறினேன். இது ஆகஸ்ட் 5ஆம் தேதி இருந்த உலகத்துக்கு மிகவும் மாறுபட்டதாக உள்ளது” என்று தெரிவித்தார். தந்தை பரூக் அப்துல்லா மற்றும் தாயாருடன் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “கிட்டத்தட்ட எட்டு மாதங்களில் முதன்முறையாக என் அம்மா மற்றும் அப்பாவுடன் மதிய உணவு சாப்பிட்டேன். நான் சற்று திகைத்துப் போயிருக்கிறேன். நான் சாப்பிட்டதை என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை. ஒரு சிறந்த உணவை என்னால் நினைவில் வைத்துக்கொள்ள முடியவில்லை” என்று கூறினார்.

உமர் அப்துல்லா தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருப்பதை எதிர்த்து அவரது சகோதரி சாரா அப்துல்லா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், “உமர் அப்துல்லாவை விடுதலை செய்வது குறித்து ஒரு வாரத்துக்குள் தெரிவிக்க வேண்டும். அல்லது இந்த வழக்கில் தகுதியின் அடிப்படையில் முடிவெடுக்கப்படும்” என அண்மையில் கூறியிருந்தது. இன்னும் சில நாட்களில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ள நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

4 நிமிட வாசிப்பு

ஸ்டாலினை சந்திப்பாரா அமித் ஷா?

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

4 நிமிட வாசிப்பு

நித்தி போல தப்ப முயற்சி: சிவசங்கர் பாபா கைது பின்னணி!

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ...

3 நிமிட வாசிப்பு

மொட்டையடித்து தப்பிக்க நினைத்த சிவசங்கர் பாபா- பள்ளிக்கு அங்கீகாரம் ரத்து?

புதன் 25 மா 2020