மின்னம்பலம் மின்னம்பலம்
காலை 7, சனி, 15 ஆக 2020

சசிகலா பரோலில் வருகிறாரா?

 சசிகலா பரோலில் வருகிறாரா?

கொரோனா வைரஸ் பற்றி வதந்திகள் தீவிரமாக பரவிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அதற்கு இணையாக சசிகலா பரோலில் விடுதலையாகிறார் என்ற தகவலும் காட்டுத் தீ போல பரவியது. ஒரு மாத காலம் சசிகலாவுக்கு பரோல் வழங்கப்பட்டிருக்கிறது. அவர் சிறையிலிருந்து இன்று வருகிறார், நாளை வந்துவிடுவார் என்றெல்லாம் சில ஊடகங்கள் தகவல் வெளியிட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தினகரனுக்கு நெருக்கமானவர்கள் தரப்பில் பேசினோம்...

“கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு முடங்கிக் கிடக்கிறது. சிறையில் சசிகலாவும் தனியாகத்தான் இருக்கிறார். இந்த நெருக்கடியான சூழலில் சசிகலாவுக்கு பரோல் கேட்கும் எண்ணம் எதுவுமே இல்லை. அமமுக பொதுச் செயலாளர் தினகரனும், குடும்பத்தினருடன் விழுப்புரம் மாவட்டம் ஆரோவில் அருகே உள்ள பண்ணை வீட்டிற்கு சென்றுவிட்டார்.

மேலும், கொரோனாவின் தீவிரம் குறையும் வரை அமமுக நிர்வாகிகள் யாரும் தன்னை சந்திக்க வர வேண்டாம் என்று உத்தரவிட்டவர், அவர்களும் யாரையும் சந்திக்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளார். சசிகலா விடுதலையாவதோ அல்லது பரோலில் வெளிவருவதோ யாருக்கும் தெரியாமல் நடக்காது. ஆகவே, சசிகலா பரோலில் வெளிவருகிறார் என்ற தகவல் வெறும் வதந்திதான். ” என்று தெரிவிக்கிறார்கள்.

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா, 2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறை சென்று மூன்று ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் சசிகலா வெளியே வருகிறார் என்ற தகவல் சமீபகாலமாக பரவியது. எனினும் “சிறையில் உள்ள அவரை வெளியே கொண்டு வருவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். ஆகவே, உரியத் தருணத்தில் அவர் வெளியே வருவார்” என்று அமமுக பொதுச் செயலாளர் தினகரன் தொடர்ந்து கூறிவருகிறார்.

வணங்காமுடி

புதன், 25 மா 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon