மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சிஏஏ எதிர்ப்பாளர்களை நிரந்தரமாக தூங்கவைப்போம்: இல.கணேசன்

சிஏஏ எதிர்ப்பாளர்களை நிரந்தரமாக தூங்கவைப்போம்: இல.கணேசன்

சிஏஏவுக்கு எதிரான போராட்டங்களைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டனர்.

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.பி.ஆர், என்.ஆர்.சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் பல இடங்களில் இரவு-பகல் போராட்டம், பேரணி தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் சிஏஏவுக்கு ஆதரவாக பாஜகவினர் பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர். சிஏஏவுக்கு ஆதரவாக அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை நோக்கியும் பிப்ரவரி 28ஆம் தேதி பேரணி செல்வோம் என்று தமிழ்நாடு பாஜக அறிவித்தது.

அதன்படி, குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு ஆதரவாகவும், அந்த சட்டத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்து வரும் எதிர்கட்சிகளை கண்டித்தும் இன்று தமிழகம் முழுவதும் சிஏஏ ஆதரவுப் பேரணியில் பாஜகவினர் ஈடுபட்டனர். தவறான பொய் பிரச்சாரங்களால் ஏமாற்றாதே, இந்து-முஸ்லீம் ஒற்றுமையை பலப்படுத்துவோம் என்பன உள்ளிட்ட வாசகங்கள் தாங்கிய பேனர்களையும் எடுத்துச் சென்றனர்.

சென்னையில் வாலஜா சாலையிலிருந்து சேப்பாக்கம் வழியாக கோட்டையை நோக்கி பேரணி நடைபெற்றது. அதில், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய இல.கணேசன், “சிஏஏ பற்றி எந்த அளவு குழப்ப முடியுமோ அவ்வளவு குழப்புகிறார்கள். தூங்குபவர்களை எழுப்பலாம், தூங்குவது போல நடிப்பவர்களை இதுபோல எத்தனை கூட்டங்கள் போட்டாலும் எழுப்ப முடியாது. அவர்களை நிரந்தரமாக தூங்க வைப்பதுதான் இதற்கு ஒரே தீர்வு” என்று கூற, பாஜக நிர்வாகிகள் கைதட்டி வரவேற்றனர்.

சட்டங்களை நிறைவேறிவிட்டதாகவும், அதை எந்தக் கொம்பனாலும் தடுக்க முடியாது என்று தெரிவித்த இல.கணேசன், “டெல்லியில் நடந்தது தமிழகத்தில் எங்கு நடந்தாலும் விபரீதத்தில் சென்று முடியும். போராட்டங்களில் இஸ்லாமியர்கள் யாரும் கலந்துகொள்ள வேண்டாம் என நான் அன்போடு வேண்டுகிறேன். திமுக போராட்டத்தை தூண்டிவிட்டு பின்னால் சென்று விடுவார்கள். துப்பாக்கிச்சூட்டில் பலியாவது முழுக்க இஸ்லாமியர்களாக தான் இருப்பார்கள். திமுகவிடம் ஏமாறாதீர்கள்” என்று வேண்டுகோள் வைத்தார்.

எழில்

வெள்ளி, 28 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon