ரெய்டுக்கு காரணம் அதிமுகவினரே!- அய்யாதுரை பாண்டியன் விளக்கம்!

politics

திமுக வர்த்தகர் அணியின் மாநில துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியனுக்கு சொந்தமான நிறுவனங்களில் கடந்த 21 ஆம் தேதி வருமான வரித்துறையினரின் ரெய்டு நடந்தது.

இதுகுறித்து மின்னம்பலம் இதழில் [செய்தி](https://minnambalam.com/politics/2020/02/22/29/ayyathurai-pandiyan-raid-dmk-backround-story) வெளியிட்டிருந்தோம்.

அதையடுத்து அய்யாதுரை பாண்டியனே நம்மைத் தொடர்புகொண்டு சில விளக்கங்களை அளித்துள்ளார்.

“எனது நிறுவனங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனைகள் குறித்து பலரும் பலவிதமான செய்திகளை பரப்புவதுடன் என்னைப் பற்றியும் மிகைப்படுத்திப் பரப்புகிறார்கள். எனவேதான் இந்த விளக்கத்தை அளிக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளேன்.

ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த நான் எனது இளம் வயதிலேயே குஜராத்துக்கு சென்று விட்டேன். அங்கே ஒரு நிறுவனத்தில் பணியில் சேர்ந்த நான் எனது உழைப்பின் மூலம் படிப்படியாக உயர்ந்து அந்நிறுவனத்தின் தலைவர் ஆனேன். அந்த நிறுவனத்தை சர்வதேச நிறுவனமாக்கியவர்களில் நானும் ஒருவர் என்ற பங்கு வகித்தேன். ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு பெற்று தமிழகம் திரும்பினேன். நான் அந்நிறுவனத்தில் தலைவராக இருந்தபோது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்கள் பலருக்கு அவரவர் கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புகளை வழங்கினேன். குறிப்பாக தமிழகத்து இளைஞர்களுக்கு அதிக அளவு வேலை வாய்ப்புகளை வழங்கியிருக்கிறேன். நிறைய ஒப்பந்த தாரர்களை உருவாக்கினேன். இதன் மூலம் பல நிலைகளில் வேலை வாய்ப்புகள் உருவாகின.

இந்த நிலையில் நான் விருப்ப ஓய்வு பெற்ற பிறகு தமிழகம் திரும்பிய பின் சமூக நலப் பணிகளில் ஈடுபட்டேன். நான் சார்ந்த சங்கரன் கோவில் பகுதி மிகவும் பின் தங்கிய பகுதி என்பதால், அங்கே தரமான கல்வியை பிள்ளைகளுக்குக் கொடுக்க வேண்டும் என்ற விருப்பத்தில் சிபிஎஸ்இ பள்ளியை பத்து வருடங்களுக்கு முன்பு தொடங்கினேன். நான் கடந்த 1983 ஆம் ஆண்டு முதலே அதிமுகவில் உறுப்பினராக (மட்டும்) இருந்தேன். அவ்வப்போது தேர்தல் சமயங்களில அக்கட்சிக்கு உதவி செய்து வந்தேன். முழுமையான அரசியலில் ஈடுபடுவது என முடிவெடுத்த நிலையில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகளில் இருந்து எனக்கு பதவி தருவதாக அழைப்பு விடுத்தார்கள்.

அதிமுகவில் பல ஆண்டுகள் உறுப்பினர் என்ற அளவில் நான் இருந்தாலும் இப்போதைய சூழலில் திமுகவே தமிழகத்துக்கு ஏற்ற கட்சியாக எனக்குத் தோன்றியது. 70 வருட பாரம்பரியம் கொண்ட கட்சி, உழைப்பவர்களுக்கு உரிய மரியாதை தரும் கட்சி, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் கட்சி என்ற அடிப்படையில் திமுகவில் சேர முடிவெடுத்தேன். அதன்படியே சுமார் மூவாயிரம் பேரோடு அறிவாலயத்தில் உழைப்புக்குப் பெயர் பெற்ற தளபதி முன்னிலையில் திமுகவில் சேர்ந்தேன். அந்த விழாவில், ‘எனக்கு முதலில் அய்யாதுரை என்று பெயர் வைப்பதாகத்தான் கலைஞர் நினைத்திருந்தார்’ என்று பேசி என்னை பெருமைப்படுத்தினார் தளபதி.

நான் இவ்வளவு விளக்கம் கொடுப்பதற்கு காரணம் இருக்கிறது. திமுகவில் நான் சேர்ந்து தீவிரமாக உழைத்தேன். இளைஞரணி சார்பிலான அண்ணா பிறந்தநாள் போட்டிகளுக்கான பரிசளிப்பு விழாவை சங்கரன்கோவிலில் மாவட்டப் பொறுப்பாளர், நிர்வாகிகளோடு இணைந்து சிறப்பாக நடத்தினோம். என் உழைப்பைப் பார்த்துதான் மாநில வர்த்தக அணி துணைத் தலைவர் பதவி திமுகவில் எனக்கு வழங்கப்பட்டது. தென்காசி தொகுதியில் மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து கடுமையாக உழைத்தேன் திமுக தென்காசியில் வென்றது.

இதையெல்லாம் பார்த்து அதிமுகவினர் என் மேல் கடுமையான அதிருப்தி அடைந்தார்கள். அந்த கட்சிக்கு அழைத்தும் செல்லாமல் திமுகவில் சேர்ந்ததும் குறிப்பாக முக்குலத்து சமுதாயத்தைச் சேர்ந்த நான் திமுகவில் சேர்ந்ததை அவர்கள் விரும்பவில்லை. என்னை மீண்டும் அழைத்தார்கள். ஆனால் நான் அவர்களின் அழைப்பை ஏற்கவில்லை. நான் அதிமுகவில் நீண்ட வருட உறுப்பினராக இருந்தபோதோ, பாஜக தலைவராக இருந்த தமிழிசை அவர்களுடன் இணைந்து பொதுப் பணிகள் ஆற்றியபோதோ வராத வருமான வரிச் சோதனை நான் திமுகவில் சேர்ந்து உழைத்ததற்குப் பிறகு வருகிறது. இதற்கு முழுக்க முழுக்க அதிமுகவினரே காரணம்.” என்றார்,

தொடர்ந்து அவரே, “இந்தியாவிலேயே குறித்த காலத்தில் வருமான வரி கட்டி வருபவர்களில் நானும் ஒருவன். நெல்லையில் எனது நிறுவனங்களில் வருமான வரி சோதனை நடத்தப்படுகிறது என்று தகவல் கிடைத்தவுடன் சென்னையில் இருந்த நான் எவ்வித தயக்கமும் இல்லாமல் நெல்லைக்கு சென்றேன். வருமான வரி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளித்தேன். பொதுவாகவே வருமான வரி சோதனை நடக்கும்போது வீட்டுக்குள் இருந்து வெளியே விடமாட்டார்கள். வெளியே இருப்பவர்கள் சோதனை நடக்கும் தங்கள் இடத்துக்கு செல்லத் துணிய மாட்டார்கள். ஆனால் நான் தகவல் கிடைத்த நான்குமணி நேரத்தில் என் நிறுவனத்துக்கு சென்றேன். வருமான வரி கமிஷனர் இதற்காக எனக்கு நன்றி சொன்னார்.

இப்படியிருக்க நான் அறிவாலயத்தில் பேசிய பேச்சுக்கும் வருமான வரிசோதனைக்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. அறிவாலயத்தில் வர்த்தக அணிக் கூட்டத்தில் நான் பேசியபோது, ‘83 ஆம் ஆண்டு முதலான எனது தொழில், அரசியல், சமூக சேவை அனுபவங்களை விளக்கிவிட்டு வருகிற சட்டமன்றத் தேர்தலில் திமுக உறுதியான வெற்றியை பெற்று தலைவர் முதல்வராவார். அந்த வெற்றிக்கு வர்த்தகர் அணியின் பங்கு மகத்தானதாக இருக்க வேண்டும். எங்கள் தென்காசி மாவட்டத்தில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன, மாவட்டப் பொறுப்பாளர், மற்ற நிர்வாகிகளோடு ஒருங்கிணைந்து செயல்பட்டு தலைவரிடம் வெற்றியை ஒப்படைப்பேன். அதற்காக எல்லா வகையிலும் நான் பாடுபடுவேன்’ என பேசினேன். மேலும் வர்த்தகர் அணிக்கென தனி வாட்ஸ் அப் குரூப் தொடங்கி அணியின் அனைத்து நிர்வாகிகளையும் ஒருங்கிணைத்து மாநிலம் முழுதும் சீரும் சிறப்புமாக நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்’ என்றும் அந்தக் கூட்டத்தில் குறிப்பிட்டேன். இதற்கும் வருமான வரி சோதனைக்கும் என்ன தொடர்பு? எல்லாம் அதிமுகவினரின் தூண்டுதலாலும் காழ்ப்புணர்வாலும் வந்தது. இதையெல்லாம் தகர்த்து என் பயணத்தைத் தொடர்வேன்:” என்று முடித்தார் அய்யாதுரை பாண்டியன்.

**-ஆரா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *