மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ரஜினியுடன் கூட்டணியா? பாமக சிறப்புப் பொதுக்குழுப் பின்னணி!

ரஜினியுடன் கூட்டணியா? பாமக சிறப்புப் பொதுக்குழுப் பின்னணி!

பாமகவின் தேர்தல் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் வரும் மார்ச் 1ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடர்பாக பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி வெளியிட்ட அறிவிப்பில், “பாமகவின் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டம் சென்னையில் வரும் மார்ச் ஒன்றாம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.00 மணிக்கு நடைபெறவுள்ளது. சென்னை திருவேற்காட்டில் உள்ள ஜி.பி.என் பேலஸ் (GPN Palace) திருமண அரங்கத்தில் பொதுக்குழு நடைபெறும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்துக்குக் கட்சித் தலைவர் ஜி.கே.மணி தலைமையேற்கிறார். 2021ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பாமகவுக்கு மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். அந்தத் தேர்தலில் பாமக வெற்றி பெறுவதற்கான உத்திகள் குறித்து இந்தச் சிறப்புப் பொதுக்குழுக் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்படும்” என்ற தகவலையும் கூடுதலாகத் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களுக்கு முன்பு ரஜினி கட்சி ஆரம்பிப்பது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்குப் பேட்டியளித்த தமிழருவி மணியன் ரஜினியுடன் பாமக கூட்டணி சேரும் என்று தெரிவித்தார். இதற்கு 12ஆம் தேதி பதிலளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், ரஜினி கட்சி ஆரம்பித்ததும் பார்க்கலாம் என்று தெரிவித்தாரே தவிர, ரஜினியுடன் கூட்டணி இல்லை என்று திட்டவட்டமாக மறுக்கவில்லை.

மறுநாள் மீண்டும் செய்தியாளர்களைச் சந்தித்து ரஜினியுடனான கூட்டணி குறித்து தான் எதுவும் சொல்லவில்லை என்று தெரிவித்ததோடு, அதிமுகவுடன் தான் இன்னும் கூட்டணியில் உள்ளதாகவும் கூறினார் ராமதாஸ். இதுபற்றி அன்புமணியும் பெரிதாக எந்தப் பதிலையும் சொல்லவில்லை. மேலும் ராமதாஸ், அன்புமணி இருவருமே 2021 சட்டமன்ற தேர்தலில் பாமக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று பேசிவருகிறார்கள்.

இந்தப் பின்னணியில் தேர்தலுக்கு இன்னும் ஒன்றரை வருடங்கள் இருக்க எதற்காக இந்தச் சிறப்புப் பொதுக்குழு என்று பாமக தரப்பில் விசாரித்தோம்....

கட்சி ஆரம்பிப்பது தொடர்பான ரஜினி தரப்பின் ஆலோசனையின்போது, பாமகவுக்கு வடமாவட்டங்களில் நல்ல வலுவான கட்டமைப்பு உள்ளது. களப்பணியாற்றுவதற்கான நிர்வாகிகளும் உள்ளனர் என்று பேசியிருக்கிறார்கள். தமிழகத்தில் கலைஞர், ஜெயலலிதாவுக்குப் பிறகு மூத்த அரசியல் தலைவர் என்றால் அது ராமதாஸ்தான். பாபா திரைப்படத்தின்போது ஏற்பட்ட கசப்புகள் எனப் பல இருந்தாலும், 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பாமகவுடன் கூட்டணி அமைக்க ரஜினி ஆசைப்படுகிறார். இதுதொடர்பாக பாமக தரப்பிலும் பேசப்பட்டிருக்கிறது.

அதாவது ரஜினியின் கட்சி தலைமையிலான கூட்டணியில் ரஜினிகாந்த் முதல்வர் வேட்பாளராக இருப்பார். ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் சோனியா காந்தி எப்படி தலைவராக இருந்தாரோ அதுபோல ரஜினி தலைமையிலான கூட்டணியில் ராமதாஸ் வழிகாட்டும் தலைவராக இருப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வரும் மார்ச் 1ஆம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் அரசியல் விஷயங்கள், தேர்தல் வியூகங்களோடு இதுதொடர்பாகவும் விவாதிக்கப்படவுள்ளது என்கிறார்கள் பாமக வட்டாரங்களில்.

மின்னம்பலம் டீம்

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon