மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

எரியும் டெல்லி; விருந்தில் மோடி- டிரம்ப்

எரியும் டெல்லி;  விருந்தில் மோடி- டிரம்ப்

டெல்லியில் குடியுருமை திருத்தச் சட்ட ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடக்கும் மோதல் வன்முறையில் இதுவரை 11 பேர் பலியாகிவிட்டனர். ஆனபோதும் டெல்லி வன்முறை தொடர்கிறது.

இன்று (பிப்ரவரி 25) பிற்பகல் டெல்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள ஒரு மசூதியில் தீ வைக்கப்பட்டது. எரியும் மசூதியைச் சுற்றி ‘ஜெய் ஸ்ரீ ராம்’ மற்றும் ‘இந்துஸ்தான் இந்துக்களுக்கே’ என்று கூச்சலிட்டுக் கொண்டு ஒரு கும்பல் அணிவகுத்துச் சென்றது. அந்த கும்பல் மசூதியின் மினார் எனப்படும் கோபுரப் பகுதியில் காவி நிற அனுமார் கொடியை ஏற்றிவைத்தது. மசூதியைச் சுற்றியுள்ள ஒரு காலணி கடை உட்பட பல கடைகள் சூறையாடப்பட்டன.

“தாக்குதல் நடத்தியவர்கள் இந்தப் பகுதியில் இருப்பவர்கள் அல்லர். இங்கே பெரும்பாலான இந்து குடும்பங்களும், சில முஸ்லிம் குடும்பங்களும் இருக்கின்றன. மசூதிக்கு தீவைத்த பின் தீயணைப்பு வீரர்கள் வந்தபோதிலும், போலீசாரைக் காண முடியவில்லை” என்று கூறுகிறார்கள் அந்தப் பகுதி மக்கள். வடக்கு டெல்லியின் பல பகுதிகளிலும் இதேபோன்ற கலவரங்களால் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.

டெல்லி இப்படி எரிந்துகொண்டிருக்கும் நிலையில்தான் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்புக்கு பிரம்மாண்ட விருந்து நிகழ்ச்சி இன்று இரவு 7.30 தொடங்கியது.

இந்த விருந்தில் டிரம்ப், அவரது மனைவி, மகள், மருமகன், அமெரிக்க அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொள்கிறார்கள். குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் பலரும் இந்த விருந்தில் கலந்துகொண்டனர்.

இந்த விருந்தில் இமயமலையில் இருந்து அதிக விலையுயர்ந்த சுவை மிகுந்த காளான்கள், மட்டன் பிரியாணி, 'ரான் ஆலிஷான்' என்று அழைக்கப்படும் ஆட்டுக்குட்டியின் கால் கறி போன்றவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த விருந்தில் தமிழக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானும் கலந்துகொண்டார்.

-குமார்

செவ்வாய், 25 பிப் 2020

அடுத்ததுchevronRight icon