மின்னம்பலம் மின்னம்பலம்
மாலை 7, திங்கள், 1 ஜுன் 2020

சட்டமன்றத் தேர்தல் வரை நிர்வாகிகள் மாற்றமில்லை! - திமுகவில் திடீர் அறிவிப்பு!

சட்டமன்றத் தேர்தல் வரை நிர்வாகிகள் மாற்றமில்லை! - திமுகவில் திடீர் அறிவிப்பு!

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாளைக் கொண்டாடுவது பற்றியும், உட்கட்சித் தேர்தல்கள் பற்றியும் ஆலோசிப்பதற்காக ஒவ்வொரு மாவட்ட திமுகவும் செயற்குழுக் கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கின்றன.

இந்த வகையில் திருவள்ளூர் வடக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டம் பிப்ரவரி 20 ஆம் தேதி ஜனப்பஞ்சத்திரம் கூட்டுசாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கும்முடிப்பூண்டி வேணு பேசும்போது வெளியிட்ட அறிவிப்பு ஒன்றிய செயலாளர்களுக்கு குஷியையும், திமுக தொண்டர்களுக்கு கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

“ஒன்றிய செயலாளர்லாம் எதையும் நினைச்சுக்காதீங்க. இப்ப இருக்கிறவங்கதான் ஒன்றிய செயலாளரு... இப்ப இருக்கிறவங்கதான் மாவட்ட நிர்வாகிங்க. இந்த ஒன்றிய செயலாளரை வச்சிதான், இந்த பேருர் செயலாளரை வச்சிதான் சட்டமன்றத் தேர்தலை சந்திக்கணும். அதனால யாரும் எதுவும் நினைக்காதீங்க. நீங்கதான் எல்லாம்” என்று பேசி ஒன்றிய செயலாளர்களுக்கும், மாவட்ட நிர்வாகிகளுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறார் வேணு. இந்தத் தகவல் திருவள்ளூர் மாவட்டம் தாண்டி வேறு பல மாவட்டங்களுக்கும் சென்று தமிழகம் முழுதும் திமுக ஒன்றிய செயலாளர்கள், தேர்தல் வரைக்கும் நாம்தான் ராஜா என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

அதேநேரம் திருவள்ளூர் மாவட்ட திமுகவினர் மத்தியில் வேறுவிதமான குரல்கள் எழுகின்றன.

“திருத்தணி தொகுதியில் 4 ஒன்றிய செயலாளர்களும் உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டு 3 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டனர். மேலும் இதுபோன்ற மோசமான செயல்பாடுகள் உள்ள ஒன்றிய செயலாளர்களின் பரிந்துரையை மாவட்ட செயலாளர் வேணு ஏற்றுக் கொண்டு சீட் வழங்கியதால்தான் ஆர்கே பேட்டை., பள்ளிப்பட்டு, பூண்டி, திருத்தணி, எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி ஆகிய எல்லா ஒன்றியங்களையும் திமுக இழந்தது. இங்கெல்லாம் அதிமுக வென்றது. திருத்தணி ஒன்றியம் ஊராட்சியில் திமுக வேட்பாளர் ஒரு வாக்கு கூட வாங்கவில்லை. இன்னும் பல ஊராட்சிகளில் 10, 15, 19 என்றே வாங்கியுள்ளது திமுக.

இப்படிப்பட்ட நிலையில் சட்டமன்றத் தேர்தல் வரைக்கும் இதே ஒன்றிய செயலாளர்கள்தான், இதே நிர்வாகிகள்தான் என்று வேணு அறிவிக்கிறார். அப்படியென்றால் சட்டமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தல் போலவேதான் முடிவு வரவேண்டுமா? இப்படிப்பட்ட தேர்தல் முடிவுகளை பெற்றுக் கொடுத்த மாசெக்களும் மாற்றப்படவில்லை என்றால் சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்வது?” என்று கேட்கிறார்கள் திமுகவினர்.

இதுகுறித்து மாசெ கும்மிடிப்பூண்டி வேணு ஆதரவாளர்களிடையே கேட்டால், “கடந்த பிப்ரவரி 17 ஆம் தேதி நடந்த மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் கிளைச் செயலாளர்கள் தேர்தல் மட்டும் இப்போது நடத்துவது எனவும், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள் என படிப்படியாக அனைத்து பதவிகளுக்கும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பே தேர்தல் நடத்தப்படும் என்று முடிவெடுக்கப்பட்டது. கிளைச் செயலாளர் தேர்தலை இப்போது நடத்துவதன் மூலம் கிராம அளவில் திமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சலாம் என்பது ஸ்டாலின் திட்டம். உட்கட்சித் தேர்தலை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் நடத்தினால் அதில் ஏற்படும் பிரச்சினைகள் தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்றும் கருதுகிறார் ஸ்டாலின். அதனால்தான் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் உட்கட்சித் தேர்தலை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கப்பட்டது. இதன் அடிப்படையில்தான் திருவள்ளூர் மாவட்டக் கூட்டத்தில் மாசெ கும்மிடிப்பூண்டி வேணு பேசியிருக்கிறார்” என்கிறார்கள்.

-வேந்தன்

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon