மின்னம்பலம் மின்னம்பலம்
வெள்ளி, 15 ஜன 2021

இந்தியா- அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

இந்தியா- அமெரிக்கா இடையே 3 ஒப்பந்தங்கள் கையெழுத்து!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரு நாள் சுற்றுப் பயணமாக நேற்று டெல்லி வந்தார். அவருடன் அவரது மனைவி மெலனியா ட்ரம்ப், மகள் இவான்கா ட்ரம்ப் மற்றும் உயர்மட்டக் குழுவினரும் வந்தனர்,

இன்று (பிப்ரவரி 25) காலை அவர்களுக்கு டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் அரசுமுறை வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து ஹைதராபாத் இல்லத்தில் ட்ரம்ப், மோடி, முக்கிய அதிகாரிகளுடன் இரு நாட்டு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.

பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு ஆகியவை குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். தலிபானுடனான அமெரிக்காவால் முன்மொழியப்பட்ட சமாதான ஒப்பந்தம், இந்தோ-பசிபிக் நிலைமை, பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் வளைகுடாவின் நிலைமை உள்ளிட்ட பிராந்திய பிரச்சினைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

இறுதியாக இன்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பாதுகாப்புத் துறையில் ரூ.21,000 கோடியில் ஒப்பந்தம், மனநலம் மற்றும் மருந்துகளின் பாதுகாப்பு என மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.

பேச்சுவார்த்தையைத் தொடந்து ஹைதராபாத் இல்லத்தில் இருவரும் கூட்டாகப் பேட்டியளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, ”என்னுடைய அழைப்பை ஏற்று இந்தியா வந்த ட்ரம்ப்புக்கு நன்றி” என கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “எனக்கும் அதிபர் ட்ரம்பிற்கும் இடையிலான கடந்த 8 மாதங்களில் நடந்த ஐந்தாவது சந்திப்பு இதுவாகும். இன்று நாங்கள் இரு நாட்டுக்கும் இடையேயான சில முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தோம். அமெரிக்க-இந்திய கூட்டாண்மை, பாதுகாப்பு, எரிசக்தி, வர்த்தகம், இரு நாட்டுக்கும் இடையேயான உறவு குறித்து விவாதித்தோம்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவது எங்கள் சந்திப்பின் ஒரு முக்கியமான அம்சமாகும். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவு என்பது இரண்டு அரசாங்கங்களுக்கிடையில் மட்டுமல்லாமல், மக்களை மையமாக கொண்டது. 21ஆம் நூற்றாண்டில் இதுபோன்ற உறவுகள் தான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

இந்தியப் படைகள், இன்று தங்கள் பெரும்பாலான பயிற்சிகளை அமெரிக்கப் படைகளுடன் இணைந்து செய்கின்றன. உள்நாட்டு பாதுகாப்பை அதிகரிப்பதற்கும் சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்ப்பதற்கும் நாங்கள் ஒத்துழைப்பை அதிகரித்து வருகிறோம். இன்று போடப்பட்டுள்ள உள்பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த ஒத்துழைப்பை மேலும் பலப்படுத்தும். எங்கள் வர்த்தக அமைச்சர்கள் வர்த்தகம் குறித்து சாதகமான பேச்சுக்களை நடத்தினர். இதில் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தைகளைத் தொடங்கவும் நாங்கள் ஒப்புக்கொண்டுள்ளோம்” என்றார்.

இதைத்தொடர்ந்து பேசிய அதிபர் ட்ரம்ப், “அப்பாச்சி & எம்.எச் -60 ரோமியோ ஹெலிகாப்டர்கள் உள்ளிட்ட மேம்பட்ட அமெரிக்க ராணுவ உபகரணங்களை 3 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் அதிகமாக வாங்குவதற்கான ஒப்பந்தங்களுடன் எங்கள் பாதுகாப்பு ஒத்துழைப்பை விரிவுபடுத்தினோம். இவை எங்கள் கூட்டு பாதுகாப்பு திறன்களை மேம்படுத்தும். பாதுகாப்பான 5ஜி ஒயர்லெஸ் நெட்வொர்க்கின் முக்கியத்துவம் பற்றியும் இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது.” என்றார்.

அமெரிக்க அதிபர் மேலும் பேசுகையில், ”கடந்த இரு தினங்களாக, குறிப்பாக நேற்று கால்பந்து மைதானத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடி என்னை வரவேற்றது, எனக்குக் கிடைத்த கவுரவம்” என்று தெரிவித்தார். மேலும், ”நேற்று ஒவ்வொரு முறையும் மோடியின் பெயரை நான் உச்சரித்த போது, அங்கிருந்த மக்கள் கரவொலி எழுப்பி உற்சாகப்படுத்தினர். இதன் மூலம் மோடியை மக்கள் எந்தளவுக்கு நேசிக்கிறார்கள் என்பது தெரிகிறது” என்று கூறினார்.

-கவிபிரியா

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon