மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, திங்கள், 1 ஜுன் 2020

ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி தெரியாது: எடப்பாடி

ஸ்டாலினுக்கு விவசாயத்தைப் பற்றி தெரியாது: எடப்பாடி

தான் ஒரு விசித்திர விவசாயிதான் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாள் விழா நேற்று (பிப்ரவரி 24) தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அதிமுகவின் சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் ஜெயலலிதா பிறந்தநாள் சிறப்புப் பொதுக் கூட்டங்கள் நடந்தன. சேலத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய முதல்வர், “தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகள் சிறப்பாக நடைபெற்றதன் காரணமாக நீர்நிலைகளில் தண்ணீர் நிறைந்தது. நீர் மேலாண்மை திட்டத்தைச் சரியாகச் செயல்படுத்தியதால் டெல்டாவின் கடைமடை பகுதி வரை தண்ணீர் சென்று இந்த வருடம் ஏழு லட்சம் ஏக்கர் கூடுதலாகப் பயிரிடப்பட்டுள்ளது. தடுப்பணைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம்” என்று தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி விவசாயி என்கிறார், அவருடைய கையில் அழுக்கு இருக்கிறதா என்று ஸ்டாலின் கேட்பதாகத் தெரிவித்த அவர், “விவசாயத்தைப் பற்றி ஒன்றுமே தெரியாத ஸ்டாலின் அப்படித்தான் பேசுவார். விவசாயத்தைப் பற்றித் தெரியாத ஒரு எதிர்க்கட்சித் தலைவர் இருப்பது தமிழ்நாட்டில்தான். ஈரோட்டில் கான்கிரீட் சாலை அமைத்து, அழுக்குப் படக்கூடாது என்பதற்காகக் காலில் சாக்ஸ் மாட்டிக்கொண்டு கரும்புத் தோட்டத்தை அவர் பார்வையிடுகிறார்” என்று கூறி அதுபற்றிய புகைப்படத்தைக் காட்டினார்.

மேலும், “நானும்தான் நெல் வயலில் அறுவடை செய்தேன். அந்த புகைப்படங்கள் கூட ஊடகங்களில் வெளியாகின. ஸ்டாலின் போலவா சென்றேன். என்னுடைய கை மண்வெட்டி பிடித்த கை. இந்த கால் சேற்றை மிதித்த கால். ஸ்டாலின் விவசாயத்தைப் பற்றித் தெரிந்து பேச வேண்டும். தயவுசெய்து விவசாயத்தைக் கொச்சைப்படுத்த வேண்டாம்.ஒரு விவசாயி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நானும் ஓர் உதாரணமாக இருந்து கொண்டிருக்கிறேன்” என்று பேசியவர்,

“பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிப்பேன் என ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. விவசாயிகள் நலனுக்காகப் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தும் நான் ஒரு விசித்திர விவசாயிதான். விசித்திர விவசாயி என என்னை ஸ்டாலின் பாராட்டியதற்கு நன்றி” என்றும் குறிப்பிட்டு உரையை முடித்தார் எடப்பாடி பழனிசாமி.

த.எழிலரசன்

செவ்வாய், 25 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon