மின்னம்பலம் மின்னம்பலம்
பகல் 1, வியாழன், 4 ஜுன் 2020

ஓ.பன்னீருக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய விஜய்: 20-20 ரகசியம்!

ஓ.பன்னீருக்கு வைக்கப்பட்ட பொறியில் சிக்கிய விஜய்: 20-20 ரகசியம்!

விஜய் படங்களோடு வேறு எந்தப் படங்கள் ரிலீஸானாலும் விஜய் படத்துக்குத்தான் மவுசு அதிகமாக இருக்கும். அதுவே பேசப்படும் என்பது கோலிவுட் அறிந்ததுதான். அதேபோலவே, பிப்ரவரி 5ஆம் தேதி அதிகாலை சினிமா ஃபைனான்சியர் அன்புச்செழியன், பிகில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம், பிகில் விநியோகஸ்தர் ஆகியோரை மையமாக வைத்து ரெய்டு வலைகள் வீசப்பட்டாலும்... நீடித்து நிலைத்துப் பேசப்படுவது விஜய்யை மையமாக வைத்து நடந்த வருமான வரித் துறை ரெய்டுகள்தான்.

பிப்ரவரி 5ஆம் தேதி தொடங்கி நான்கு நாட்கள் அன்புச்செழியனைக் குடைந்தனர் ஐடி அதிகாரிகள். அன்புக்குப் பிறகே கல்பாத்தி அர்ச்சனா, விநியோகஸ்தர் என்று விஜய்யை நோக்கிச் சென்றனர். ரெய்டுகள் நடந்து முடிந்த பிறகு, சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் வருமான வரித் தலைமை அலுவலகமான ஆயக்கர் பவனுக்கு அர்ச்சனா, அன்பு ஆகியோர் நேரில் சென்று விசாரணையில் பங்கேற்றனர். 11ஆம் தேதி அன்புவிடம் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

மீடியாக்கள் அடுத்த பரபரப்பு தேடி பறவைகளைப் போல செல்ல ஆரம்பித்த நிலையிலும் வருமான வரித் துறை வட்டாரத்துக்குள் இந்த ரெய்டுகள் பற்றிய அதிர்வலைகள் இன்னும் தொடர்கின்றன.

இந்த ரெய்டின் நியூட்ரானாக இருந்த ஐடி அதிகாரிகள் சிலர் தங்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில், “என்னமோ விஜய்யை மத்திய அரசு குறிவைக்கிறது என்றும் விரட்டுகிறார்கள் என்றும் டிவிக்களில் நடக்கும் விவாதத்தைப் பார்த்தால் சிரிப்பாக வருகிறது. இத்தனை மீடியாக்கள் இருந்தபோதும் வருமான வரித் துறை அதிகாரிகளை நேரடியாகத் தொடர்புகொண்டது ஒரு சிலர்தான். மற்ற அனைத்து மீடியாக்களும் தாங்களே வருமான வரித் துறையினராக மாறி வரிவரியாகச் செய்திகளை வெளியிட்டார்கள். உண்மை என்னவெனில் ஓபிஎஸ்ஸுக்கு வைத்த குறியில் விஜய் வந்து சிக்கிக்கொண்டார்” என்று சிரிக்கிறார்கள்.

ஐடி அதிகாரிகளிடம் தொடர்ந்து துருவினோம். அப்போது கிடைத்த தகவல்களைத் தொகுத்துத் தருகிறோம்.

ஓ.பன்னீர் செல்வத்தின் பிறந்தநாளான ஜனவரி 14ஆம் தேதியன்று மின்னம்பலம்.காமில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. ஓபிஎஸ் சொத்துகள்: ரகசியமாய் நடக்கும் விசாரணை! என்ற தலைப்பில் வெளிவந்த அந்த செய்தியில், “துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மையமாக வைத்து மத்திய அரசு ஒரு ரகசிய ஆபரேஷனை நடத்திவரும் தகவல் அதிமுக வட்டாரங்களில் இருந்தே லீக் ஆகியிருக்கிறது. அதாவது ஓ.பன்னீர்செல்வத்துக்கும் அவரோடு தொடர்புடையவர்களுக்கும் சொந்தமான சொத்துகள் என்னென்ன, அவை சமீபகாலமாக யாரிடம் இருந்து யாருக்கு கைமாறின என்பதையெல்லாம் பட்டியலிட்டு வைத்துக்கொண்ட மத்திய உளவுத் துறை இது சரியாக இருக்கிறதா என்று சில வாரங்களாகவே விசாரித்து வருகிறது. திரட்டப்பட்ட பெரும்பாலான விவரங்கள் சரியாகவே இருக்கிறது என்று மத்திய அரசுக்குத் தகவல் சென்றிருக்கிறது. இந்த விஷயத்தை மெல்ல மெல்ல அறிந்துகொண்ட ஓபிஎஸ் தரப்பினர், ‘இவ்வளவு சரியாக விவரங்களைக் கொடுத்தது யாராக இருக்கும்?’ என்று தங்களுக்குள் விவாதித்து வருகின்றனர்” என்பதுதான் அந்த செய்தி.

ஜனவரி இரண்டாவது வாரமே ஓ.பன்னீரின் சொத்து, பணப் பாதுகாப்புக் குழு உறுப்பினர்கள் யார் யார் என்று பட்டியலிட்ட ஐடி அதில் முக்கியமான நபராக அன்புச்செழியனை டிக் செய்திருந்தது. இந்தப் பட்டியல் வருமான வரித் துறைக்குப் போய் இரண்டு வாரங்கள் முழு மூச்சாக ஆய்வு செய்யப்பட்டு அதன் பிறகு ஆற அமர தயாராகி அதன் பிறகே பிப்ரவரி 5ஆம் தேதி அன்புச்செழியன் வீட்டுக்கு ரெய்டு போனது வருமான வரித் துறை டீம்.

ஏற்கனவே கிடைத்த தகவல்களால் ஓ.பன்னீர் தரப்பு இதில் எச்சரிக்கையாக இருந்து டெல்லியில் தட்ட வேண்டிய ஜன்னலைத் தட்டி, திறக்க வேண்டிய கதவைத் திறந்து தற்காலிகமாகத் தப்பித்துக் கொண்டது. ஆனால், அன்புச்செழியன் எல்லைக்குள் பன்னீரைக் குறிவைத்து போன ஐடி டீமுக்குப் பலகாரமாய் சிக்கியிருக்கிறார் விஜய்.

“பிகில் படத்துக்காக விஜய்க்கு அதன் தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவனம் பேசிய சம்பளம் 50 கோடி ரூபாய். அதில் 30 கோடி ரூபாய் முழு வெள்ளையாக விஜய்க்கு வங்கி மூலமாகவே கொடுக்கப்பட்டுவிட்டது. அதற்கான வரி 30 சதவிகிதம் கணக்கிட்டு 9 கோடி ரூபாயை விஜய் கட்டிவிட்டார். பேசிய 50 கோடியில் மீதமுள்ள 20 கோடி விஜய்க்கு 'தனியாக' கொடுக்கப்பட்டது.

இதற்குப் பின்னர் பிகிலின் விநியோகஸ்தர்கள் தரப்பிடம் விஜய் பேசிக்கொண்டிருந்தபோது படம் 250 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியிருப்பதாக அவர்கள் விஜய்யைப் புகழ்ந்தார்கள். அப்போது கொஞ்சம் சலனப்பட்ட விஜய், தயாரிப்புத் தரப்பிடம் சென்று, ‘படம்தான் இவ்வளவு கலெக்‌ஷன் போயிருக்கே. எனக்கு இன்னும் ஒரு 20 தரலாமே?’ என்று கேட்டிருக்கிறார். விஜய் எப்போதும் இப்படிக் கேட்கிற ஆளில்லை. ஆனாலும் தயாரிப்பாளர் விஜய்யின் உரிமைக் குரலை மதித்து இன்னும் ஒரு 20 கோடியை விஜய்க்குக் கொடுத்திருக்கிறார். வெளிப்படையாய் கொடுத்த 30 மட்டுமே தயாரிப்புத் தரப்பின் மூலம் கொடுக்கப்பட்டது. முதல் 20, விஜய் கேட்டபின் கொடுத்த அடுத்த 20 என இரண்டுமே அன்பு மூலமாகத்தான் விஜய்க்குச் சென்று சேர்ந்திருக்கிறது. ஆக எதையோ எதிர்பார்த்து அன்புவிடம் போன வருமான வரித் துறை அதிகாரிகளுக்கு இந்த ட்வென்ட்டி - ட்வென்ட்டி விவகாரம் தெரியவந்திருக்கிறது.

ஏற்கனவே தமிழில் வெளியாகும் பிரமாண்ட சினிமாக்களின் வியாபாரம் குறித்து வருமான வரித் துறையில் ஒரு டீம் கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும். அந்த டீம் விஜய் நடித்த பிகில் கலெக்‌ஷன் பற்றி ஏற்கனவே தரவுகளைச் சேகரித்து வைத்திருந்தது. இந்த நிலையில் அன்புவிடம் பணத்தோடு கிடைத்த விஜய்க்கான செட்டில்மென்ட் காகிதங்கள் பற்றி அன்பு வீட்டில் வேட்டையாடிய டீம் மேலிடத்துக்குத் தகவல் கொடுக்க, உடனடியாக ஏற்கனவே பிகில் பட வசூல் நிலவரத்தைக் கவனித்துவந்த அதிகாரிகள் டீம் தயாரிப்பாளரான ஏஜிஎஸ் நிறுவனம், விநியோகஸ்தர் பூமி பில்டர்ஸ் ஆகியோரது வீடுகளிலும் அலுவலகங்களிலும் திடீர் ரெய்டு நடத்தியது. இதற்கெல்லாம் பிறகு அன்று பிற்பகலில்தான் ஆவணங்கள் உறுதிபட பேசியதன் அடிப்படையில் நெய்வேலியில் படப்பிடிப்பைத் தேடிப் போனார்கள்.

அன்பு வீட்டில் எடுக்கப்பட்டவை, ஏஜிஎஸ் வீடு மற்றும் அலுவலகத்தில் கிடைத்த ஆவணங்கள், பூமி பில்டர்ஸ் ரெய்டில் சிக்கிய ஆவணங்களின் மூலம் விஜய்க்கு இருபது + இருபது தனியாகச் சென்றிருப்பதான தகவல் அறிந்த பிறகு விஜய் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவெடுத்து மேலே அனுமதி கேட்டது அதிகாரிகள் டீம். ஆவணங்களின் கனம் அதிகமாக இருந்ததால் உடனே அனுமதி கொடுக்கப்பட்டு நெய்வேலிக்கே சென்று விஜய்யைச் சந்தித்து விளக்கி அவரை காரிலேயே சென்னை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் வருமான வரித் துறை அதிகாரிகள்.

விஜய் தான் ரெய்டின் மையம் என்றால் முதலில் விஜய் வீட்டுக்குத்தான் சென்றிருப்போம். ஆனால் டார்கெட் லிஸ்ட்டில் விஜய்யே இல்லை. ஆனாலும் கிடைத்த ஆவணங்களில் விஜய் வகையாகச் சிக்கிக்கொண்டதால் சில மணி நேரங்களில் அனுமதி பெற்று விஜய்யை விசாரித்தோம். தொடர்ந்து விசாரித்து வருகிறோம். இதுதான் நடந்தது. பன்னீர் தப்பித்தார்... விஜய் சிக்கினார்” என்று விவரித்து முடித்தார்கள் வருமான வரித்துறையின் நியூட்ரான் வட்டாரத்தினர்.

-மின்னம்பலம் டீம்

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon