மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

50 லட்சம் நிதி: திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன்

50 லட்சம் நிதி: திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன்

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணையும் நிகழ்ச்சி இன்று (பிப்ரவரி 23) மதுரை ஒத்தகடையில் நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஸ்டாலினுக்கு செங்கோலும் நினைவுப் பரிசும் அளித்தார் ராஜகண்ணப்பன். தொடர்ந்து நலத் திட்ட உதவிகள் வழங்குவதற்காக கலைஞர் அறக்கட்டளைக்கு 50 லட்சம் ரூபாய் நிதிக்கான காசோலையும் வழங்கினார்.

விழாவில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், “முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் எந்நாளும் செயல்வீரராக இருப்பவர். ஒரு நாள் அண்ணா அறிவாலயத்தில் ராஜகண்ணப்பன் என்னை வந்து சந்தித்து தேதி கேட்டார். என்ன விஷயம் என்று கேட்டேன். திமுகவில் இணையப்போகிறேன் என சொன்னார். எனக்கு கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தது. திமுகவில்தானே அவர் இருக்கிறார் என்று அதுவரை நான் நினைத்திருந்தேன். அந்த அளவுக்கு திமுகவோடு ஒன்றிணைந்து செயல்பட்டுக்கொண்டிருந்தவர். இருப்பினும் இன்று நம்மோடு ஒன்றாகியுள்ளார்” என்று தெரிவித்தார்.

ராஜகண்ணப்பனின் சுறுசுறுப்பு மிகவும் பிடிக்கும் எனத் தெரிவித்த ஸ்டாலின், “இனிமையாக அதே சமயம் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் ராஜகண்ணப்பன். அப்படிப்பட்டவர் மிகவும் முக்கியமான நேரத்தில் திமுகவில் இணைந்துள்ளார். அவரையும் அவருடன் திமுகவில் இணைந்துள்ளவர்களையும் கட்சியின் தலைவர் என்ற முறையில் நான் வரவேற்கிறேன்” என்று வரவேற்றார்.

1991ஆம் ஆண்டு அதிமுக சார்பில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வென்ற ராஜகண்ணப்பன், 91-96 அதிமுக ஆட்சியில் பொதுப் பணித் துறை அமைச்சராக பதவிவகித்தார். அதன்பிறகு அதிமுகவிலிருந்து விலகி மக்கள் தமிழ்த் தேசம் கட்சியை ஆரம்பித்த அவர், 2001 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றார். பின்னர் கட்சியைக் கலைத்துவிட்டு திமுகவில் இணைந்த ராஜகண்ணப்பன், 2006இல் இளையான்குடி தொகுதியில் நின்று வெற்றிபெற்றார்.

2009ஆம் ஆண்டு தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு அதிமுகவில் இணைந்து சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திடம் தோல்வியைத் தழுவினார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தர்மயுத்தம் தொடங்கிய பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்டார். நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் சிவகங்கை தொகுதியில் சீட் கேட்டு மறுக்கப்படவே, அதிமுகவிலிருந்து விலகி திமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் மதுரையில் நடைபெறும் பொதுக் கூட்டத்தின் வாயிலாக திமுகவில் இணைந்துள்ளார்.

த.எழிலரசன்

ஞாயிறு, 23 பிப் 2020

அடுத்ததுchevronRight icon