மின்னம்பலம் மின்னம்பலம்
செவ்வாய், 19 ஜன 2021

சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது பெற்ற தமிமுன் அன்சாரி

சிறந்த இளம் எம்.எல்.ஏ விருது பெற்ற தமிமுன் அன்சாரி

எம்ஐடி பல்கலைக்கழகத்தின் சிறந்த இளம் எம்.எல்.ஏ.வுக்கான விருது தமிமுன் அன்சாரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறது எம்ஐடி பல்கலைக்கழகம். இந்தியாவின் புகழ்பெற்ற முதல் 10 தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றான இதில் 58,000க்கும் அதிகமான மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

இந்த நிறுவனத்தின் வழிகாட்டலின்படி, ‘இந்திய மாணவர் நாடாளுமன்றம்’ என்ற அமைப்பு கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. எதிர்காலத்தில் கொள்கையும் திறமையும்கொண்ட அரசியல் தலைவர்களை உருவாக்குவதே இதன் நோக்கம். அந்த வகையில் இந்தியாவின் முன் மாதிரி இளம் அரசியல் தலைவர்களைக் கண்டறிந்து இப்பல்கலைக்கழகம் விருதுகளை வழங்கி ஊக்குவித்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறந்த இளம் சட்டமன்ற உறுப்பினராக மனிதநேய ஜனநாயகக் கட்சியின் பொதுச் செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமான மு.தமிமுன் அன்சாரி தேர்வு செய்யப்பட்டார்.

இந்த நிலையில் டெல்லி விஞ்ஞான் பவனில் நேற்று (பிப்ரவரி 22) நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறந்த இளம் எம்.எல்.ஏ.வுக்கான விருதை தமிமுன் அன்சாரிக்கு ஐநா சபை மக்கள்தொகை நிதியகத்தின் பூடான் இயக்குநர் அர்ஜெண்டினா மார்டவேல், ஜெயின் மத அறிஞர் ஆச்சார்யா லோகேஷ் ஆகிய இருவரும் இணைந்து வழங்கினர். தமிழ்நாட்டில் இந்த விருதைப் பெறும் முதல் எம்.எல்.ஏ இவர்தான்.

விருதைப் பெற்றதும், முதலில் என் தாய்மொழியில் ஏற்புரை செய்கிறேன் என ஆங்கிலத்தில் கூறிய தமிமுன் அன்சாரி, “தந்தை பெரியாரும், திருவள்ளுவரும் தமிழர்களின் வழிகாட்டிகள். இந்த விருதை என் நாகை தொகுதி மக்களுக்கும், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தொண்டர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன்” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து, “நான் எம்ஐடி பல்கலைக்கழகத்துக்கு நன்றி கூறுகிறேன். இந்த விருதைப் பெற்றதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். சமூக நீதியைப் பாதுகாக்கவும், சகோதரத்துவம், ஜனநாயகம், நவீன இந்தியா மற்றும் ஆரோக்கியமான அரசியல் வளரவும் அனைவரும் உழைக்க வேண்டும். ஒருநாள் நம் அனைவரின் கனவும் நிறைவேறும். ஜெய்ஹிந்த்” என்று ஆங்கிலத்தில் கூறி தனது உரையை நிறைவு செய்தார்.

எம்ஐடி பல்கலைக்கழகத்துக்கு வருகை தர வேண்டும் என தமிமுன் அன்சாரிக்குப் பல்கலைக்கழக நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் பல்கலைக்கழகம் இசைஞானி இளையராஜாவுக்கு ஏற்கனவே ஒரு விருது அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-த.எழிலரசன்

ஞாயிறு, 23 பிப் 2020

chevronLeft iconமுந்தையது
அடுத்ததுchevronRight icon